குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்
ஆத்தூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். காலிக்குடங்களுடன் பெண்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆத்தூர்:-
ஆத்தூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். காலிக்குடங்களுடன் பெண்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சாலைமறியல்
ஆத்தூர் அருகே பைத்தூர் ஊராட்சி 8, 9-வது வார்டு பகுதிகளில் ஆழ்துளை கிணறுகளில் மின்மோட்டார் பழுது ஏற்பட்டதால் பல நாட்கள் ஆகியும் அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து பலமுறை ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் தகவல் சொல்லியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
நேற்று விநாயகர் சதுர்த்தி என்பதாலும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாகவும் ஆத்திரமடைந்த பைத்தூர் ஊராட்சி 8, 9-வது வார்டு பொதுமக்கள், பெண்கள் காலிக்குடங்களுடன் பைத்தூரில் ஆத்தூர் பிரதான சாலையில் நேற்று காலை 9 மணி அளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
தகவல் அறிந்ததும் ஆத்தூர் தாசில்தார் மாணிக்கம், ரூரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் வருவாய்த்துறையினர், போலீசார், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மோட்டார் பழுது நீக்கப்படும் அல்லது மாற்று வழி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனால் சுமார் 2½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.