ஏரியூர்:-
ஏரியூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது ஊராட்சி தலைவரிடம் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குடிநீர் தட்டுப்பாடு
ஏரியூர் அருகே சுஞ்சல் நத்தம் ஊராட்சி திண்ணை பெல்லூர் கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊரில் நீண்ட நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில் வாரம் ஒருநாள் மட்டுமே குடிநீர் வழங்குவதால் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர். இதை தொடர்ந்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். ஆனால் எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை.
எனவே நேற்று காலை திண்ணைபெல்லூர் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். பள்ளி, கல்லூரி பஸ்களையும், தனியார் பஸ்களையும் மறித்து சாலைமறியல் செய்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
அப்போது பேச்சுவார்த்தைக்கு வந்த போலீசார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவரிடம் பெண்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அடுத்த 2 நாட்களுக்குள் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தி தரப்படும் என போலீசாரும், ஊராட்சி மன்ற நிர்வாகமும் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த போராட்டத்தால் சுமார் 1½ மணி நேரம் பென்னாகரம்- நாகமரை சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த மறியல் போராட்டத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.