பொட்டியபுரத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
பொட்டியபுரத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஓமலூர்:
குடிநீர் குழாய்
ஓமலூர் அருகே பொட்டியபுரத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் கிராமத்தின் பெரும்பாலான பகுதிகளில் முறையான குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பொட்டியபுரம் 6-வது வார்டு பகுதியில் குடிநீர் வினியோகம் இல்லாததால் அங்கு வசிக்கும் மக்கள் தங்களது சொந்த செலவில் குடிநீர் குழாய் அமைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த வீதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்ற போது, ஊராட்சி நிர்வாகத்தினர் பொதுமக்கள் அமைத்த குடிநீர் குழாய் இணைப்பை துண்டித்தனர். அதன்பிறகு பல மாதங்களை கடந்தும் இதுவரை மீண்டும் ஊராட்சி நிர்வாகத்தினர் குடிநீர் குழாய் அமைத்து கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் பக்கத்து தெருக்களுக்கு சென்று தண்ணீர் பிடிக்க வேண்டிய நிலை இருந்து வந்துள்ளது. ஆனால் பக்கத்து தெருவிலும் மாதத்துக்கு 2 அல்லது 3 தடவை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
சாலை மறியல்
எனவே பொட்டியபுரம் 6-வது வார்டில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீர் குழாய் அமைத்து தரக்கோரி ஊராட்சி நிர்வாகத்திடமும், ஒன்றிய அலுவலக அதிகாரிகளிடமும் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதன் காரணமாக குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நேற்று காலை ஓமலூர் -தின்னப்பட்டி ரோட்டில் பொட்டியபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சையும் சிறைபிடித்தனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
இது பற்றி தகவல் அறிந்த ஊராட்சி மன்ற செயலாளர் தன்ராஜ் மற்றும் ஓமலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 2 நாட்களில் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பேரில் அவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சிறை பிடித்த அரசு பஸ்சையும் விடுவித்தனர்.
சாலை மறியல் போராட்டத்தால் ஓமலூர்-தின்னப்பட்டி ரோட்டில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.