நாகையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்:முன்னறிவிப்பின்றி கடைகளை இடித்ததாக கூறி பொதுமக்கள் சாலை மறியல்
நாகை நகராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. முன்னறிவிப்பின்றி கடைகளை இடித்ததாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாகை நகராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. முன்னறிவிப்பின்றி கடைகளை இடித்ததாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
நாகை புதிய பஸ் நிலைய சுற்றுவட்டார பகுதிகளில் பயணிகளுக்கு இடையூறாக கடைகள் வைத்திருப்பதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகை புதிய பஸ் நிலைய பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினார். அப்போது பயணிகளுக்கு இடையூறாக நடைபாதையில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும். பயணிகள் அமரும் இடங்களில் போதுமான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என நகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
சாலை மறியல்
அதன்படி நகரமைப்பு அலுவலர் நாகராஜன் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் நேற்று காலை பொக்லின் எந்திரங்களை கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தம்பிதுரை பூங்காவில் தொடங்கி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி சாலை வழியாக அண்ணாசிலை வரை சாலையோரங்களை ஆக்கிரமித்து வைத்திருந்த கடைகளை அகற்றினர். இந்த நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, கால அவகாசம் வழங்காமல் கடைகளை இடித்து விட்டதாக கூறி அண்ணாசிலை அருகே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முன் அறிவிப்பின்றி கடைகளை இடித்து சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியதன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.