ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகை
அத்தியாவசிய பொருட்களை முறையாக வழங்காததால் ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் ஊஞ்சவேலாம்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி
அத்தியாவசிய பொருட்களை முறையாக வழங்காததால் ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் ஊஞ்சவேலாம்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.
முற்றுகை
பொள்ளாச்சி அருகே ஊஞ்சவேலாம்பட்டியில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 1,400 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இந்த நிலையில் ரேஷன் கடையை திறந்து 13 நாட்களுக்கு மேலாகி விட்டதாக தெரிகிறது. மேலும் பொருட்கள் சரிவர வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், ஊஞ்சவேலாம்பட்டி ரேஷன் கடையை நேற்று முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
அப்போது ஊழியர் ஒருவர் வந்து கடையை திறந்த போது, பொதுமக்கள் ரேஷன் கடையில் எவ்வளவு பொருட்கள் இருப்பு உள்ளது என்பது குறித்த விவரத்தை தெரிவிக்க வேண்டும். எனவே அதிகாரிகள் வந்த பிறகே பொருட்களை வினியோகம் செய்ய வேண்டும் என்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், அதிகாரிகள் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது நாளை (புதன்கிழமை) முதல் பொருட்கள் சரியாக வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
உறுதிப்படுத்த வேண்டும்
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
ஊஞ்சவேலாம்பட்டி ரேஷன் கடையில் அரிசி, பருப்பு, மண் எண்ணெய் உள்ளிட்ட எந்த அத்தியாவசிய பொருட்களும் சரியாக வினியோகம் செய்வதில்லை. குறிப்பாக மண் எண்ணெய் வாங்க சீட்டு கொடுத்த பிறகும் வழங்குவதில்லை.
இதற்கிடையில் அடுத்த மாதம் வந்து விட்டால் அந்த மாதத்திற்கு மட்டும் தான் வழங்குகின்றனர். இதுகுறித்து கேட்டால் ஊழியர் சரியான பதில் கூறுவதில்லை. சில நேரங்களில் கைரேகை விழுவதற்கு தாமதம் ஆவதாக கூறி பொருட்கள் வழங்க இழுத்தடிக்கின்றனர். எனவே அதிகாரிகள் அடிக்கடி பொருட்களின் இருப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும். முறையாக பொருட்கள் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.