கெங்கநல்லூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

கெங்கநல்லூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2023-03-20 18:18 GMT

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கெங்கநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் செந்தில்குமார் கடந்த வாரம் கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். இதனையடுத்து கெங்காநல்லூர் ஊராட்சியில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேரில் ஆய்வு செய்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டு அவர்கள் வைத்த கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.

இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்தும் அரசு தொகுப்பு வீடு வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாகவும். 100 நாள் வேலை திட்டத்தை சரிவர வழங்குவதில்லை எனவும் பல்வேறு புகார்களை கூறியும் நேற்று திடீரென 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கெங்கநல்லூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் செய்தனர்.

அலுவலகம் பூட்டிருந்ததால் வெளியே நின்று கோஷங்கள் எழுப்பி அரசு ஒதுக்கிய தொகுப்பு வீடுகளை யார் யாருக்கு ஒதுக்கப்பட்டதோ அவர்களுக்கு கட்டித் தர வேண்டும், மேலும் அரசு வழங்கும் திட்டங்களை முறையாக அனைவருக்கும் செயல்படுத்த வேண்டும் 100 நாள் வேலை திட்டத்தில் பாரபட்சம் இன்றி அனைத்து பிரிவினருக்கும் வேலை வழங்க வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்தனர்.அதற்குள் முற்றுகையிட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்று விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்