பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
சித்தையன்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செம்பட்டி அருகே சித்தையன்கோட்டையில் உள்ள மேற்கு தெருவில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு சிவன் கோவில் செல்லும் சாலையில் பழமை வாய்ந்த கிணறு உள்ளது. இந்த கிணற்றில் கடந்த 5 நாட்களாக ஒரு தரப்பினர் சார்பில் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இந்நிலையில் மற்றொரு தரப்பினர் கிணற்றை பராமரிக்கும் பணியை நிறுத்த வேண்டும் என்று சித்தையன்கோட்டை பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தனர்.
இதனால், ஆத்திரமடைந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் சித்தையன்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பல ஆண்டுகளாக கோவில் திருவிழாவின்போது கரகம் ஜோடிக்கும் இடத்தில், உள்ள கிணற்றை பராமரிக்கும் பணியை ஒரு தரப்பினர் தடுத்த நிறுத்த முயற்சி செய்கின்றனர் என்று அவர்கள் கூறினர். இதையடுத்து அவர்கள் கிணற்றை பராமரிக்கும் பணியை தொடர அனுமதி வழங்க வேண்டும் என்று பேரூராட்சி செயல் அலுவலர் சிவக்குமாரிடம் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து, விசாரணை நடத்தப்படும் என்று அவர் கூறினார். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.