4 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து உண்ணாவிரதம்

முத்துப்பேட்டை தாலுகாவுடன் இணைக்கப்பட்டதை கண்டித்து கடைகளை அடைத்து 4 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-25 18:45 GMT

கோட்டூர்:

முத்துப்பேட்டை தாலுகாவுடன் இணைக்கப்பட்டதை கண்டித்து கடைகளை அடைத்து 4 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கருத்து கேட்பு கூட்டம்

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள குறிச்சிமூளை, களப்பால், வெங்கத்தான்குடி, குலமாணிக்கம் ஆகிய ஊராட்சிகளை புதிதாக உருவாக்கப்பட்டுள்ள முத்துப்பேட்டை தாலுகாவில் இணைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக 2008-09-ம் ஆண்டில் களப்பால் மேல்நிலைப்பள்ளியில் மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் குறிச்சிமூலை, களப்பால், வெங்கத்தான்குடி குலமாணிக்கம்ஆகிய ஊராட்சிகளை முத்துப்பேட்டை தாலுகாவில் இணைக்க கூடாது. மன்னார்குடியில் இருந்து பிரிக்க நினைத்தால் திருத்துறைப்பூண்டி தாலுகாவோடு இணைக்க வேண்டும். அல்லது களப்பாலை மையமாக கொண்டு தனி வருவாய் சரகத்தை உருவாக்க வேண்டும் என 4 ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் கருத்து தெரிவித்தனர்.

உண்ணாவிரதம்

இதனை தொடர்ந்து தாசில்தார் அலுவலகத்தில் நடந்த பேச்சு வார்த்தையிலும் இதே கருத்தை அவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் முத்துப்பேட்டை தாலுகாவுடன் இணைத்ததை கண்டித்து களப்பால், குறிச்சி மூலை, வெங்கத்தான்குடி, குலமாணிக்கம் ஆகிய 4 ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து களப்பால் பஸ் நிலையம் அருகில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு 4 ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் வர்த்தக சங்க மாட்ட துணை தலைவர் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம் மற்றும் 4 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கடைகள் அடைப்பு

முத்துப்பேட்டை தாலுகாவுடன் இணைக்கப்பட்டதை கண்டித்து களபால், குறிச்சிமுலை, வெங்கத்தான்குடி, குலமாணிக்கம் ஆகிய 4 ஊராட்சிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த மன்னார்குடி கோட்டாட்சியர் கீர்த்தனா மணி சம்பவ இடத்துக்கு சென்று போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்த கோரிக்கை குறித்து மாவட்ட கலெக்டர் மூலம் தமிழக அரசுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும். ஒரு மாதத்துக்குள் அரசின் அனுமதி பெற்று தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் கோட்டாட்சியர் உறுதி அளித்தார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்