மழைக்கால விபத்துகளை மக்கள் தவிர்க்க பாதுகாப்பு நடைமுறைகள்

மழைக்கால விபத்துகளை மக்கள் தவிர்க்க பாதுகாப்பு நடைமுறைகளை கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-13 18:45 GMT


திண்டுக்கல் மாவட்டத்தில் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் மழைக்காலத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கலெக்டர் விசாகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:


மழைக்கால பாதுகாப்பு


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி வழியும் தருவாயில் உள்ளது. உபரிநீர் வெளியேறி வருவதால் ஆற்றின் அருகில் பொதுமக்கள் செல்லவோ, ஆற்றை கடக்கவோ வேண்டாம். ஆறுகளில் அதிக அளவு வெள்ளம் வருவதால் ஆற்றுப்பகுதி அருகில் வசிக்கும் மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.


குளங்கள் அனைத்தும் நிரம்பும் நிலையில் உள்ளதால், பொதுமக்கள் யாரும் குளங்களுக்கு செல்ல வேண்டாம். மேலும், அருவி பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். அணைகள், ஆறு, ஏரி, குளம் மற்றும் நீர்த்தேக்கங்கள் போன்றவற்றில் வரும் வெள்ளத்தை வேடிக்கை பார்க்கவோ, குளிக்கவோ குழந்தைகளை அனுமதிக்க கூடாது.


மின்கம்பம்


அதேபோல் மின்கம்பத்தில் கயிறு கட்டி துணிகளை காய வைப்பதை தவிர்க்க வேண்டும். குளியலறை, கழிப்பறையில் ஈரமான இடங்களில் பழைய பழுதான சுவிட்சுகளை பயன்படுத்த வேண்டாம். மின் கம்பம், அதை தாங்கும் கம்பிகளில் கால்நடைகளை கட்டக்கூடாது.


மழை காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பிகள், மின்பகிர்வு பெட்டிகள் ஆகியவற்றின் அருகே யாரும் செல்ல வேண்டாம். இடி, மின்னல் ஏற்படும் போது டிவி உள்ளிட்ட மின்சாதனங்களை பயன்படுத்துதை தவிர்க்க வேண்டும். மின்கம்பங்கள், மரங்கள், மின்கம்பிகள் ஆகியவற்றின் கீழே நிற்கக்கூடாது.


பழைய கட்டிடங்கள், புதியதாக கட்டப்படும் கட்டிடங்களின் கீழே மழைக்கு ஒதுங்க வேண்டாம். மலை பகுதிகளில் மண் சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ள பகுதிகளில் பொதுமக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். எனவே பொதுமக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி கவனமாக இருக்க வேண்டும்.


இவ்வாறு கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்