மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க முடியாததால் பொதுமக்கள் அவதி
இணையதள பிரச்சினையால் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க முடியாததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
ஊட்டி,
இணையதள பிரச்சினையால் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க முடியாததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
சிறப்பு முகாம்
தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. குறைந்த கால அவகாசம் மட்டும் வழங்கப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். டிசம்பர் 31-ந் தேதி வரை மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம் என்று கால அவகாசம் வழங்கப்பட்டது.
அதன்படி நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் தொடங்கியது. மின்வாரிய அலுவலகங்களில் நடைபெறும் முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு ஆதாரை ஆர்வத்துடன் இணைத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஊட்டி பஸ் நிலையம் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இணையதள பிரச்சினை
அவர்கள் ஆதார் அட்டையுடன் வந்திருந்தனர். ஆனால், மதியம் 12 மணி முதல் இணையதள பிரச்சினை (சர்வர்) ஏற்பட்டதால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். ஏற்கனவே இ-சேவை மையம் மற்றும் ஆன்லைன் மூலம் ஆதார் எண்ணை இணைக்க முடியாதவர்கள் மின்வாரி அலுவலகத்திற்கு வந்தனர். இணையதள பிரச்சினையால் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க முடியாததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.இதற்கிடையே பொதுமக்களை காத்திருப்பதை கருத்தில் கொண்டு, ஆதார் தரவுகள் மற்றும் மின் இணைப்பு எண்ணை மின்வாரியத்தினர் நோட்டில் தனியாக எழுதிக் கொண்டனர்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, இணையதள பிரச்சினை ஏற்பட்டதால் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க காலதாமதம் ஆனது. ஒரு பதிவு மேற்கொள்ள 5 நிமிடம் ஆகிறது. கால அவகாசம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம். மேலும் வழக்கமாக 3.30 மணிக்கு பணிகளை முடிக்காமல், கூடுதலாக 2 மணி நேரம் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. படிப்படியாக இணைத்துக் கொள்ளலாம், நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 2 லட்சத்து 38 ஆயிரம் மின் இணைப்புகள் உள்ளது. இதுவரை 20 சதவீதம் பேர் ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர் என்றனர்.