ஒரு மாதத்திற்கு மேலாக குடிநீர் கிடைக்காததால் பொதுமக்கள் அவதி

ஒரு மாதத்திற்கு மேலாக குடிநீர் கிடைக்காததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

Update: 2022-09-13 19:14 GMT

கொள்ளிடம் குடிநீர் வினியோகம்

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி ஊராட்சியில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. திருப்பைஞ்சீலியில் சிவன் கோவில் அருகே பொதுவாக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு, அங்கு எந்த நேரம் சென்றாலும் குடிநீரைப் பிடித்து செல்லலாம் என்ற நிலை இருந்து வந்தது.

இந்நிலையில், முக்கொம்பு அணையில் இருந்து அதிக அளவில் நீர் கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்பட்டதால், ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஊராட்சிக்கான கூட்டுக்குடிநீர் திட்ட மோட்டார் செயல்படவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக திருப்பைஞ்சீலியில் கொள்ளிடம் குடிநீர் கிடைக்காததால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.

தண்ணீர் சுத்திகரிக்கப்படும் எந்திரம் பழுது

மேலும் குடிநீருக்காக திருப்பைஞ்சீலியில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் அழகியமணவாளம் கைகாட்டி அருகே உள்ள குடிநீர் குழாயில் இருந்து இருசக்கர வாகனங்களிலும், சரக்கு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களிலும் ஆண்கள் தினமும் தண்ணீர் எடுத்து செல்லும் நிலை உள்ளது. இதன் காரணமாக கூலி தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், திருப்பைஞ்சீலி ஊராட்சி கட்டிடம் அருகே கடந்த பல மாதங்களுக்கு முன்பு பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட தண்ணீர் சுத்திகரிக்கப்படும் எந்திரம் சில நாட்களிலேயே பழுதடைந்து விட்டது. இதை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகம் மற்றும் மண்ணச்சநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் பலமுறை கூறியும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

கோரிக்கை

எனவே, உயரதிகாரிகள் இப்பிரச்சினையில் தலையிட்டு தரமான தண்ணீர் சுத்திகரிக்கப்படும் எந்திரம் அமைக்கப்பட்டுள்ளதா? என்று விசாரணை நடத்த வேண்டும். மேலும், உடனடியாக மோட்டார் பழுதை நீக்கி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்