ராமநாதபுரத்தில் அதிகரிக்கும் வழிப்பறி சம்பவங்களால் மக்கள் அதிர்ச்சி

ராமநாதபுரத்தில் கடந்த சில நாட்களாக நள்ளிரவில் நடக்கும் வழிப்பறி சம்பவங்களால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2023-02-04 18:40 GMT

ராமநாதபுரத்தில் கடந்த சில நாட்களாக நள்ளிரவில் நடக்கும் வழிப்பறி சம்பவங்களால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

செல்போன் பறிப்பு

ராமநாதபுரம் வசந்தநகர் 1-வது தெருவை சேர்ந்தவர் பழனிக்குமார் மகன் வெற்றிகபிலன் (வயது 23). இவர் தனது தம்பி ஹரியுடன் நேற்று முன்தினம் கேணிக்கரை சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். கள்ளர்தெரு சந்திப்பு அருகில் வந்து கொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்த காட்டூரணி எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் வின்சென்ட் ராஜா (25) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி ஹரி பையில் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் மதிப்பிலான செல்போனை பறித்து கொண்டு சென்றுவிட்டார்.

இதுகுறித்து வெற்றி கபிலன் அளித்த புகாரின் அடிப்படையில் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து வின்சென்ட் ராஜாவை கைதுசெய்தனர். இவர் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மடிக்கணினி திருட்டு

ராமநாதபுரம் அரண்மனை அருகே கொத்தனார் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் சுகுமார். ராமநாதபுரம் டவுன் மீன்மார்க்கெட்டில் மீன்வியாபாரம் செய்து வருகிறார். இதற்காக இவர் தினமும் அதிகாலையில் தனது இருசக்கர வாகனத்தில் மீன்மார்க்கெட் செல்வது வழக்கம். நேற்று முன்தினம் இவ்வாறு சென்று கொண்டிருந்தபோது ரைஸ்மில் அருகே 3 பேர் வழிமறித்தனர். அவரை கீழே தள்ளி அவர் வைத்திருந்த ரூ.19 ஆயிரம், மடிக்கணினி, செல்போன் ஆகியவற்றை பறித்துகொண்டு தப்பிஓடிவிட்டனர்.

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பொதுமக்கள் அச்சம்

இதேபோல நேற்று முன்தினம் ராமநாதபுரம் சாயக்காரத்தெரு பகுதியில் திருமாவளவன் என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி 3 பேர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிந்ததே. இவ்வாறு ராமநாதபுரத்தில் கடந்த சில தினங்களாக வழிப்பறி சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகிறது. நள்ளிரவு நேரங்களிலும், மாலை நேரங்களிலும் தனியாக நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறிசெய்து வருவதால் மக்கள் வெளியில் செல்ல அச்சமடைந்து வருகின்றனர். எனவே இரவு நேரத்தில் கூடுதல் போலீசார் ரோந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்