மயானத்திற்கு செல்லும் சாலையில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்

முதியவர் உடலை மயானத்திற்கு எடுத்துச்சென்ற சாலையில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் சமாதான பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு காணப்பட்டது.

Update: 2023-06-28 18:11 GMT

போராட்டம்

கந்தர்வகோட்டை அருகே குளத்தூர் நாயக்கர்பட்டி கிராமம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 61). இவர் வயது முதிர்வு காரணமாக இன்று இறந்தார். நாகராஜ் உடலை அவரது இல்லத்தில் இருந்து மயானத்திற்கு எடுத்து செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் இறந்தவர் உடலை மயானத்திற்கு கொண்டு செல்வதற்கு பல காலமாக பயன்படுத்திய சாலையை தனிநபர் ஆக்கிரமித்து வீடு கட்டியும், முள்வேலிகள் அமைத்து உள்ளார்.

இதனால் நாகராஜ் உடலை எடுத்து செல்ல முடியவில்லை. எனவே ஆக்கிரமித்துள்ள சாலையை மீட்டு இறந்தவர் உடலை மயானத்திற்கு கொண்டு செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று கூறி நாகராஜ் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து கந்தர்வகோட்டை தாசில்தார் மற்றும் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தனர்.

பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு

இதைதொடர்ந்து கந்தர்வகோட்டை தாசில்தார் காமராஜ் இன்ஸ்பெக்டர் செந்தில் மாறன், ஊராட்சி மன்ற தலைவி ஜோதி ராணி மகாலிங்கம், வருவாய் அலுவலர் செல்வ சத்யா, கிராம நிர்வாக அலுவலர் மாலதி மற்றும் வருவாய்த்துறையினர், போலீசார் ஆகியோர் இருதரப்பினரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த முள்வேலிகளை அகற்றி இறந்தவரின் உடலை மயானத்திற்கு எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்து கொடுத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்