கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்

கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-09-26 19:12 GMT

கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம், திருமானூரை அடுத்த தூத்தூர் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு குடிநீர் கொண்டு செல்வதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் கடந்த ஆட்சியின்போது தூத்தூர், குருவாடி பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்டும் திட்டம் செயல்படுத்த இருந்த நிலையில், தற்போதைய தி.மு.க. அரசு அதனை ரத்து செய்து ராட்சத ஆழ்துளை கிணறு அமைக்க முயற்சிப்பதால், தங்களது நீராதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்று குற்றம்சாட்டி தொடர்ந்து அப்பகுதி மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக நேற்று குருவாடி கிராமத்தில் அப்பகுதியை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள், அ.தி.மு.க.வினர் உள்ளிட்ட பலர் ஒன்றிணைந்து கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வலியுறுத்தியும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு எங்களின் கோரிக்கையை ஏற்கவில்லை என்றால் தொடர்ந்து இது போன்ற பல்வேறு போராட்டங்களை நடத்துவோம். எங்களின் ரேஷன் அட்டைகளை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைப்போம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்