வாழவந்தி கோம்பை ஊராட்சியில் மழைநீரால் செட்டிகுளம் ஏரி வழித்தடம் துண்டிப்பு பொதுமக்கள் அவதி

வாழவந்தி கோம்பை ஊராட்சியில் மழைநீரால் செட்டிகுளம் ஏரி வழித்தடம் துண்டிப்பு பொதுமக்கள் அவதி

Update: 2022-10-06 18:45 GMT

சேந்தமங்கலம்:

சேந்தமங்கலம் அருகே வாழவந்தி கோம்பை ஊராட்சியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் செட்டிகுளம் ஏரி உள்ளது. இந்த ஏரி சமீபத்தில் பெய்த மழையால் நிரம்பியது. இந்த நிலையில் ஏரியின் அருகே பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சிறு பாலம் பழுதடைந்து காணப்பட்டதால் அதனை அகற்றிவிட்டு ரூ.28 லட்சம் மதிப்பில் புதிய பாலம் அமைக்கும் பணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து சில நாட்கள் நடந்து வந்த பணி திடீரென நிறுத்தப்பட்டது. கொல்லிமலையில் பெய்த தொடர் மழை காரணமாக செட்டிகுளம் ஏரிக்கு மீண்டும் தண்ணீர் வரத்து அதிகமானது. இதனால் ஏரியின் வழித்தடம் துண்டிக்கப்பட்டது.

தற்போது அந்த வழியே எந்த ஒரு வாகனமும் செல்ல முடியாத நிலையில் காணப்பட்டு வருகிறது. அப்பகுதியில் உள்ள செட்டிகுளம், வை அணை, சக்தி நகர் போன்ற பகுதியை சேர்ந்தவர்கள் சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவு சுற்றிக்கொண்டு மாற்றுப்பாதை வழியாக பிற இடங்களுக்கு அவதியடைந்து சென்று வருகின்றனர்.

மேலும் புதிய பாலம் அமைக்கும் பணி நடைபெறும் இடத்திற்கு முன்புறமும், பின்புறமாக எந்த ஒரு அறிவிப்பு பலகையும் வைக்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால் செட்டிகுளம் வழியாக செல்வோர் சிலர் ஏமாற்றம் அடைந்து திரும்பி வருகின்றனர். எனவே அங்கு 2 பகுதியிலும் விளம்பர பலகை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்