முதல்-அமைச்சரின் அனைத்து திட்டங்களும் மக்களை சென்றடைய அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் முதன்மை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் வேண்டுகோள்
முதல்-அமைச்சரின் அனைத்து திட்டங்களும் மக்களை சென்றடைய அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் என்று அரசின் முதன்மை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் வேண்டுகோள் விடுத்தார்.
முதல்-அமைச்சரின் அனைத்து திட்டங்களும் மக்களை சென்றடைய அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் என்று அரசின் முதன்மை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் வேண்டுகோள் விடுத்தார்.
ஆய்வுக்கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டஅரங்கில் அரசின் முன்னோடி திட்டங்கள், வளர்ச்சி பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், நில சீர்திருத்த துறை அரசின் முதன்மை செயலாளருமான டாக்டர் பீலா ராஜேஷ் தலைமை தாங்கினார். கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் அரசின் முதன்மை செயலாளர் பீலா ராஜேஷ் பேசியதாவது:-
முதல்-அமைச்சரின் திட்டங்கள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம், வடகிழக்கு பருவமழையையொட்டி நீர்வரத்து கால்வாய்கள் சீரமைக்கும் பணிகள், பட்டா வழங்கும் பணிகள், இ-சேவை மையம் மூலம் சான்றிதழ்கள் வழங்கும் பணிகள், எண்ணும் எழுத்தும் இயக்கம் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும் பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள், சுய தொழில் முனைவோரை உருவாக்கும் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் பணிகள் குறித்து துறை வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. துறை வாரியாக நடைபெற்று வரும் நிலுவை பணிகளை அலுவலர்கள் விரைவாக முடிக்க வேண்டும். முதல்-அமைச்சர் அறிவித்துள்ள அனைத்து திட்டங்களும் மக்களை சென்றடைய அலுவலர்கள் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வு
தொடர்ந்து கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் பாலேப்பள்ளி ஊராட்சியில் தமிழ்நாடு கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ஒரப்பம் எலத்தகிரி சாலை முதல் தேசிய நெடுஞ்சாலை வரை ரூ.35 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தார்சாலை பணிகளை பீலா ராஜேஷ் ஆய்வு செய்தார்.
மேலும் பர்கூர் பேரூராட்சி, எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் பிசியோதெரபி குறித்து கேட்டறிந்து மருந்து பெட்டகங்களை வழங்கினார். பின்னர் எம்.ஜி.ஆர். நகரில் நடைபெற்ற சிறப்பு காய்ச்சல் சிகிச்சை முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்து, முகாமிற்கு வரும் நோயாளிகளின் பரிசோதனை குறித்தும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார்.
அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்ரமணி, வெங்கட்ராம கணேஷ், பர்கூர் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.