புகையிலை பொருட்கள் விற்ற கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்
புகையிலை பொருட்கள் விற்ற கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வேப்பூரில் ஓட்டல்கள், டீ கடை, மளிகை கடை, பேக்கரி மற்றும் இறைச்சி கடைகளில் தடை செய்யப்பட்ட மற்றும் காலாவதியான உணவு பெருட்கள், காலாவதியான குளிர் பானங்கள், பிளாஸ்டிக் பைகள், புகையிலை பொருட்கள் ஆகியவை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளதா? என்று சுகாதார துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் பெரம்பலூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் இளங்கோவன், மாவட்ட நலக்கல்வியாளர் செல்லப்பாண்டியன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தாசன் மற்றும் பெருமத்தூர், முருக்கன்குடி, துங்கபுரம் ஆரம்ப சுகாதார நிலையங்களை சேர்ந்த சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாவட்ட மருத்துவம் இல்லா மேற்பார்வையாளர் ஸ்மித் சைமன் ஆகியோர் ஈடுபட்டனர். ஆய்வின்போது சில கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் கடைகளில் தடை செய்யபட்ட புகையிலை மற்றும் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி, உணவு பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.