சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்

தரங்கம்பாடி பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2022-10-11 18:45 GMT

பொறையாறு:

தரங்கம்பாடி பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்

தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் பூபதி கமலக்கண்ணன், பேரூராட்சி மன்ற தலைவர் சுகுணசங்கரி குமரவேல் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-தரங்கம்பாடி தேர்வு நிலை பேரூராட்சி பகுதியான தரங்கம்பாடி, சாத்தங்குடி, பொறையாறு, எருக்கட்டாஞ்சேரி மற்றும் கைகாட்டி பகுதி ஒழுகை மங்கலம், கீழமேட்டுப்பாளையம், நண்டலாறு சோதனை சாவடி ஆகிய பகுதிகளில் சாலைகளில் குதிரைகள் மற்றும் மாடுகள் சுற்றித்திரிக்கின்றன.மேலும் தரங்கம்பாடி மற்றும் காரைக்கால் பிரதான சாலைகளிலும் சுற்றித்திரிகின்றன. இதனால் விபத்துகள் ஏற்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

அபராதம்

தற்போது விவசாய பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. விளைநிலங்களில் கால்நடைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. பொறையாறு மற்றும் தரங்கம்பாடி பகுதியில் பூக்கடை, பழக்கடை மற்றும் காய்கறிகள் கடைகளில் பொருட்களை கால்நடைகள் தின்று விட்டு செல்கின்றன. போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க வேண்டும் என புகார் வருகின்றன.எனவே சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் பிடித்து பட்டியில் அடைத்து வளர்க்க வேண்டும். தவறும் பட்சத்தில் 14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்