கட்டிட கழிவுகளை கொட்டினால் அபராதம்
கூடலூர் நகர வீதிகளில் கட்டிட கழிவுகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்தார்.
கூடலூர் 2-ம் நிலை நகராட்சியாக இயங்கி வருகிறது. இங்கு மக்கள் தொகையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. விளை நிலங்களும் குடியிருப்புகளாக மாறி வருகிறது. இந்நிலையில் தற்போது கூடலூர் நகர பகுதிகளில் புதிய குடியிருப்புகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பாக புதிய வீடு கட்டுபவர்கள் கட்டிட கழிவுகளை வீதிகளிலும், சாலை ஓரங்களிலும் கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால் பொதுமக்கள், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது.
இந்நிலையில் நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் கட்டிட நகர் பகுதியில் கொட்டப்பட்ட கழிவுகளை நகராட்சி பணியாளர்கள் அகற்றினர். எனவே தூய்மையே சேவை என்ற திட்டத்தின் மூலம் நகர வீதிகள், சாலையோரங்களில் கட்டிட கழிவுகளை கொட்டாமல் நகராட்சி அறிவித்து உள்ள இடங்களில் மட்டுமே கொட்ட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதை சிலர் மீறி வருகின்றனர். இதனால் கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் காஞ்சனா, சுகாதார ஆய்வாளர் விவேக் ஆகியோர் எச்சரிக்கை விடுத்தனர்.