தேசிய நெடுஞ்சாலையில் எதிர் திசையில் வந்த கன்டெய்னர் லாரிகளுக்கு அபராதம்

பள்ளிகொண்டா அருகே தேசிய நெடுஞ்சாலையில் எதிர் திசையில் வந்த 3 கன்டெய்னர் லாரிகளுக்கு அபராதம் விதிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

Update: 2023-07-12 19:47 GMT

எதிர் திசையில் வந்த லாரிகள்

குடியாத்தம் தாலுக்கா அகரம் சேரி ஊராட்சிக்கு உட்பட்ட நரிக்குறவர் காலனியில் பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் சுமார் 38 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த வீடுகள் கட்டும் பணியை நேற்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது வேலூரில் இருந்து அகரம்சேரி வழியாக நரிக்குறவர் காலனிக்கு அவரது வாகனம் செல்லும் போது ஆம்பூரில் இருந்து பள்ளிகொண்டாவை நோக்கி எதிர் திசையில் மூன்று கன்டெய்னர் லாரிகள் வருவதை பார்த்த மாவட்ட கலெக்டர், காரை நிறுத்திவிட்டு கன்டெய்னர் லாரி டிரைவரிடம் போலீசாரை விசாரிக்க சொன்னார். அப்போது அவர்கள் சென்னைக்கு செல்வதாக கூறினர்.

அபராதம்

இதனயடுத்து சாலை விதிகளை மீறி ஆறு வழிச்சாலையில் எதிர் திசையில் வந்த கன்டெய்னர் லாரிக்கு அபராதம் விதிக்க குடியாத்தம் மற்றும் வேலூர் வாகன ஆய்வாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து ஆய்வாளர்கள் ரமேஷ் கண்ணா மற்றும் மாணிக்கம் ஆகியோர் தலா ரூ.2,000 வீதம் மூன்று லாரிக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதனைதொடர்ந்து பள்ளிக்குப்பத்தில் கால்நடை மருத்துவமனை கட்டுவதற்கு அகரம் சேரி ஊராட்சி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் மாவட்ட கலெக்டரை பார்த்ததும் அகரம் சேரி ஊராட்சி பொதுமக்கள் எங்கள் பகுதியிலேயே கால்நடை மருத்துவமனை கட்ட வேண்டும் என வலியுறுத்தினர். அதற்கு கால்நடை மருத்துவமனை கட்டுவதற்கு தேவையான இடத்தை தேர்வு செய்து அதற்கான ஆவணங்களை உடனடியாக சமர்ப்பித்தால் மருத்துவமனை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கூறினார்.

குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் குடியாத்தம் தாசில்தார். வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்