நாகர்கோவிலில் ஒரு வழிப்பாதையில் வந்த 50 ஆட்டோக்களுக்கு அபராதம்

நாகர்கோவிலில் ஒரு வழிப்பாதையில் தடையை மீறி வந்த 50 ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2022-08-24 20:55 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் ஒரு வழிப்பாதையில் தடையை மீறி வந்த 50 ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஒருவழிச்சாலை

நாகர்கோவிலில் உள்ள ஒரு வழிச்சாலைகளில் தடையை மீறி ஆட்டோக்கள் செல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

இதை தொடர்ந்து போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் தலைமையில் போலீசார் நேற்று மாலை அவ்வை சண்முகம் சாலையில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அபராதம்

அப்போது கட்டபொம்மன் சந்திப்பில் இருந்து மீனாட்சிபுரம் நோக்கி ஒரு வழிப்பாதையில் ஏராளமான ஆட்டோக்கள் வந்தன. அந்த ஆட்டோக்களை போலீசார் தடுத்து நிறுத்தினார். பின்னர் அந்த ஆட்டோக்கள் அனைத்தும் போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. ஒரு ஆட்டோவுக்கு ரூ.600 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த வகையில் மொத்தம் 50 ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இது குறித்து போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருணிடம் கேட்டபோது கூறியதாவது:-

நாகர்கோவிலில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில் ஒன்றாக ஒரு வழிப்பாதையில் வரும் ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டு உள்ளது. எனவே இனி ஒரு வழிப்பாதையில் தடையை மீறி ஆட்டோக்கள் வரக்கூடாது. அவ்வாறு வந்தால் முதற்கட்டமாக ரூ.600 அபராதம் விதிக்கப்படும். அபராதம் செலுத்திய ஆட்டோக்கள் மீண்டும் ஒரு வழி பாதையில் வரும் பட்சத்தில் அபராதமானது இரட்டிப்பாக விதிக்கப்படும். அதன் பிறகும் சம்பந்தப்பட்ட ஆட்டோக்கள் ஒருவழிப்பாதையில் வந்தால் ஆட்டோ டிரைவரின் லைசென்சை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அதிகாரிக்கு பரிந்துரை செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்