உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 2 வாகனங்களுக்கு அபராதம்

கோவில்பட்டியில் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 2 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2023-02-10 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அதிகாரி நெடுஞ்செழிய பாண்டியன் நேற்று மாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது வாகனம் இயக்குவதற்கான பெர்மிட், தகுதி சான்று, இன்சூரன்ஸ், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இயக்கிய லாரியை பறிமுதல் செய்தார். இதற்கு ரூ.22 ஆயிரம் அபராதம் விதித்தார். இதேபோல் சாலை வரி செலுத்தாமலும், தகுதி சான்று, இன்சூரன்ஸ், ஓட்டுனர் உரிமம் இல்லாமலும் இயக்கிய 3 சக்கர சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து சாலை வரி ரூ.12 ஆயிரம், மற்றும் அபராதம் ரூ.12,500 விதித்தார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, பஸ், மினிபஸ், பள்ளி, கல்லூரி பஸ் படிக்கட்டுகளில் பயணம் செய்தால் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதை மீறி பயணிகளை ஏற்றிச்செல்லும் ஓட்டுனர், நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் 18 வயதிற்கு கீழ் உள்ள மாணவ-மாணவிகள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் இயக்குவது குற்றமாகும். இதற்கு வாகனத்தை பறிமுதல் செய்து ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதுடன், பெற்றோருக்கு 3 மாத ஜெயில் தண்டனை விதிக்கப்படும். எனவே பெற்றோர்கள் 18 வயதிற்கு கீழ் உள்ள தங்கள் குழந்தைகள் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதை அனுமதிக்க வேண்டாம் என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்