போதை பொருட்கள் விற்றால் ரூ.10 லட்சம் வரை அபராதம்

பள்ளி, கல்லூரி அருகில் போதை பொருட்கள் விற்றால் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கூறினார்

Update: 2022-10-03 18:45 GMT

சிவகங்கை, 

பள்ளி, கல்லூரி அருகில் போதை பொருட்கள் விற்றால் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கூறினார்

ஆலோசனை கூட்டம்

தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பிற மாநிலங்களில் இருந்து கொரியர், பார்சல் சர்வீஸ், மற்றும் ஆம்னி பஸ்கள் மூலமாக தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்தி வருவதை கட்டுப்படுத்த தற்போது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆம்னி பஸ் உரிமையாளர்கள், கொரியர் சர்வீஸ் நடத்துபவர்கள் மற்றும் பார்சல் சர்வீஸ் நடத்துவோர்களுடனான ஆலோசனை கூட்டம் சிவகங்கையில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பேசியதாவது:- வெளி மாநிலங்களில் இருந்து அல்லது வெளி மாவட்டங்களில் இருந்து மட்டுமே இங்கு தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கொண்டு வரப்படுகிறது. போலீசாரின் தீவிர கண்காணிப்பு காரணமாக தற்போது மாற்று வழியாக கொரியர், ஆம்னி பஸ் மற்றும் பார்சல் சர்வீசை பயன்படுத்துகின்றனர்.

ரூ.10 லட்சம் அபராதம்

மாவட்டத்தில் கடந்த ஆண்டு தடை செய்யப்பட்ட போதை பொருளை பயன்படுத்தியதாக 45 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தற்போது கடந்த 9 மாதத்தில் 78 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 156 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 110 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 45 கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. கொரியர் மற்றும் பார்சல்களில் போதை பொருட்கள் கொண்டு வரப்படுவதை அறிந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

பள்ளி, கல்லூரி அருகில் போதை பொருட்கள் விற்றால் ரூ.1 லட்சம் முதல் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். இதுகுறித்து 860860 0100 என்ற இலவச எண்ணில் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வகுமார், சிவகங்கை போலீஸ் துணை சூப்பிரண்டு சிபி சாய் சவுந்தர்யன், தாலுகா இன்ஸ்பெக்டர் ரமேஷ், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ், ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்