முத்து மாரியம்மன் கோவில் திருவிழா

கோத்தகிரி அருகே முத்து மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

Update: 2022-06-08 14:27 GMT

கோத்தகிரி, ஜூன்.9-

கோத்தகிரி அரவேனு அருகே தவிட்டுமேட்டில் முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 3-ந் தேதி காலை காளி பூஜை, முனீஸ்வரர் பூஜைகள் நடத்தப்பட்டு கும்பம் பாலித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. 4-ந் தேதி அம்மன் பவனி வருதல், 5-ந் தேதி பூ கரகம் எடுத்து வருதல், அக்கினி சட்டி ஊர்வலம், அலகு குத்துதல் நிகழ்ச்சியும், இதனைத் தொடர்ந்து பக்தர்கள் பூ குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை மாவிளக்கு பூஜை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து 6-ந் தேதி காலை காளியம்மாள் நாக பூஜையும், தொடர்ந்து முனீஸ்வரர் மற்றும் முன்னடியானுக்கு கிடா வெட்டி பூஜை நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை அம்மன் பவனி வருதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து மஞ்சள் நீராடலும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் தலைவர் வெள்ளையன் தலைமையில் கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்