திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் சமீப நாட்களாக குடியிருப்பு பகுதிகளுக்கு இரை தேடி வரும் மயில்கள் மின்மாற்றி மற்றும் மின்கம்பங்களில் மோதி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ஒரு சில இடங்களில் மின்கம்பங்களில் மோதி காயமடையும் மயில்கள், நீண்ட நேரம் உயிருக்கு போராடி பலியாகும் சம்பவங்களும் நடக்கிறது. இந்த நிலையில் திருப்பூர் அவினாசி ரோடு பெரியார்காலனி டி.டி.பி. மில் ரோட்டிற்கு நேற்றுகாலை மயில் ஒன்று பறந்து வந்தது.
அப்போது எதிர்பாராதவிதமாக அந்த பகுதியில் இருந்த மின்மாற்றியில் மயில் மோதியது. இதனால் மின்மாற்றியில் லேசாக தீப்பற்றியது. இதில் அந்த மயில் மின்மாற்றியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை துண்டித்து விட்டு, உயிரிழந்த மயிலை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். பின்னர் வனத்துறை அதிகாரிகள் அங்கிருந்த செத்த மயிலை எடுத்து சென்றனர்.