சமாதான பேச்சுவார்த்தை கூட்டம்
வாசுதேவநல்லூர் அருகே தலையணையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது.
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் அருகே தலையணை பகுதிகளில் 43 பழங்குடியினர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்கள். இவர்கள் மேற்கு மலைத் தொடர்ச்சி பகுதியில் உள்ள காடுகளில் சென்று தேன் எடுத்தல், குங்குலியம், சுண்டைக்காய், கல்தாமரை மற்றும் சிறு வன மகசூல் சேகரித்து பல்வேறு தொழில் செய்து வாழ்ந்து வருகிறார்கள். கடந்த 23-ந் தேதி இப்பகுதியில் வசித்து வரும் ஈசன் மனைவி சரசு (42) மற்றும் ராஜா (35) ஆகியோர் தலையணை பகுதிக்கு சென்றபோது, அங்குள்ள கேரளா- தமிழ்நாடு வனத்துறை எல்லைப்பகுதியில் கேரளா வனத்துறை அலுவலர்கள் இந்தப் பகுதியில் வரக்கூடாது என கண்டித்ததாகவும், மேலும் அவர்கள் வைத்திருந்த வன மகசூல் பொருட்களை பிடித்து இழுத்து அவமானப்படுத்தியதாகவும் வாசுதேவநல்லூர் போலீசில் புகார் செய்தனர்.
இதுகுறித்து வாசுதேவநல்லூர் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் கேரளா மற்றும் தமிழக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதனை ஏற்று கேரள வனத்துறையை சார்ந்த பெரியார் கோட்டம் ரேஞ்சர் அகில் பாபு, கடையநல்லூர் ரேஞ்சர் சுரேஷ் மற்றும் வனத்துறை அதிகாரிகள், தலையணை பகுதியில் வசிக்கும் பளியர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்பாக சமூக ஆர்வலர்கள் பாண்டியன், ராமராஜ் ஆகியோரிடம் தலையணையில் உள்ள வேதக்கோவிலில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் 23-ந் தேதி நடந்த சம்பவத்திற்கு கேரள வனத்துறை அதிகாரி வருத்தம் தெரிவித்தாா். இச்சம்பவம் தொடர்பாக 4 பேரை வருகிற 2-ந் தேதிக்குள் ஆஜர்படுத்தி விசாரணை செய்வதாகவும் உறுதியளித்தார். மேலும் அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகளை மரியாதை குறைவாக நடத்தும் எந்த ஒரு செயலிலும் ஈடுபட மாட்டோம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.