சீர்காழி தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம்

விதிகளை மீறி மண் ஏற்றி செல்லும் லாரிகளை சிறைப்பிடிக்கும் போராட்டம் அறிவித்ததன் எதிரொலியாக சீர்காழி தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடந்தது.

Update: 2023-06-24 18:45 GMT

சீர்காழி:

விதிகளை மீறி மண் ஏற்றி செல்லும் லாரிகளை சிறைப்பிடிக்கும் போராட்டம் அறிவித்ததன் எதிரொலியாக சீர்காழி தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடந்தது.

சிறைபிடிக்கும் போராட்டம்

சீர்காழி பகுதியில் கொள்ளிடம் முதல் கருவி வரை புறவழிச்சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல், வேட்டங்குடி, எடமணல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சவுடுமண்கள் எடுக்கப்பட்டு லாரிகள் மூலம் இரவு பகலாக கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இவ்வாறு கொண்டு செல்லப்படும் மண் லாரிகள் அளவுக்கு அதிகமாக மண்களை ஏற்றிக்கொண்டு மண் மீது தார் பாய் மூடாமல் செல்வதால் சீர்காழி நகர் பகுதி முழுவதும் சாலைகளில் சவுடுமண்கள் சிதறி காணப்படுகிறது.

மேலும் லாரியின் பின்புறம் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. பள்ளி நேரங்களில் வரிசையாக செல்லும் மண் லாரிகளால் மாணவர்கள் கடும் போக்குவரத்து இடையூறுக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் பொதுமக்களுக்கு இடையூறாக அளவுக்கு அதிகமாக மண்களை ஏற்றிக் கொண்டு பாதுகாப்பற்ற முறையில் செல்லும் லாரிகளை சிறை பிடிக்கப்போவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போராட்டம் அறிவித்திருந்தனர்.

சமாதான கூட்டம்

இதன் எதிரொலியாக சீர்காழி தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மண்டல தாசில்தார் ரஜினி தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் விஜயரெங்கன் மற்றும் போலீசார், புறவழிச்சாலை அமைக்கும் நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் பள்ளி நேரங்களில் மணல் லாரிகளை இயக்கக் கூடாது, அளவுக்கு அதிகமாக மண் ஏற்றி பாதுகாப்பற்ற முறையில் லாரிகளை இயக்கக் கூடாது, சட்ட விதிமுறைக்கு மீறி ஆழமாக மண் எடுக்கும் மணல் குவாரி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சாலையில் சிதறி கிடக்கும் சவுடு மண் தினந்தோறும் அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேலும் சம்பந்தப்பட்ட உயர்அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படும் என கூறியதை அடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்த இருந்த போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவித்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்