புஞ்சைபுளியம்பட்டி அருகே பயங்கரம் தலையில் கல்லைப்போட்டு தாயை கொன்ற 9-ம் வகுப்பு மாணவன்

புஞ்சைபுளியம்பட்டி அருகே பள்ளிக்கூடம் செல்ல வற்புறுத்தியதால் ஆத்திரம் அடைந்த 9-ம் வகுப்பு மாணவன் தாயின் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொன்றான்.

Update: 2022-10-13 21:54 GMT

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டி அருகே பள்ளிக்கூடம் செல்ல வற்புறுத்தியதால் ஆத்திரம் அடைந்த 9-ம் வகுப்பு மாணவன் தாயின் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொன்றான்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

9-ம் வகுப்பு மாணவன்

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள சுங்ககாரன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அருட்செல்வன். இவர் சாலை அமைத்தல் மற்றும் கட்டிடம் கட்டும் ஒப்பந்ததாரராக உள்ளார். இவருடைய மனைவி யுவராணி (வயது 36). இவர் புஞ்சைபுளியம்பட்டி மின்சார வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். கோவையில் தங்கி இருந்து ஒப்பந்த வேலைகளை அருட்செல்வன் கவனித்து வருகிறார்.

இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகனும், 12 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இதில் அவர்களுடைய மகன் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். இதற்காக அவன் பள்ளிக்கூட விடுதியில் தங்கி இருந்து படித்து வருகிறான். மகள் புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

சமாதானம்

கடந்த 4 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கூட விடுதியில் இருந்து வீட்டுக்கு யுவராணியின் மகன் வந்து உள்ளான். நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் தாய் யுவராணியிடம், தான் பள்ளிக்கும் செல்ல மாட்டேன். விடுதிக்கும் செல்ல மாட்டேன் என சண்டை போட்டதாக கூறப்படுகிறது. அப்போது யுவராணி தனது மகனை பள்ளிக்கூடம் செல்ல வற்புறுத்தியதாகவும், இதுபற்றி நாளை (அதாவது இன்று) காலை அப்பா வந்ததும் இதுபற்றி பேசிக்கொள்ளலாம் எனக்கூறி சமாதானம் செய்ததாக தெரிகிறது. இதில் தாயும், மகனும் சமாதானம் ஆகி இரவில் தூங்க சென்றனர்.

கொலை

இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் தூங்கி கொண்டிருந்த சிறுவன் தூக்கத்தில் இருந்து விழித்து எழுந்தான். பிறகு தனது தாயை எட்டிப்பார்த்தான். அவர் நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தார். திடீரென சிறுவன் தாய் யுவராணியின் தலையில் சிமெண்டு செங்கல் (ஹாலோ பிளாக் செங்கல்) மற்றும் பூந்தொட்டி ஆகியவற்றை தூக்கிப்போட்டு தாக்கினான். இதில் வலி தாங்க முடியாமல் யுவராணி சத்தம்போட்டு அலறினார்.

இந்த காட்சிைய கண்டதும் மிரட்சியில் அரண்டு போன சிறுவனின் தங்கை பீதியில் சத்தம் போட்டு அழுதபடி கீழ் தளத்தில் வசித்து வரும் தன்னுடைய சித்தப்பா சிவசக்தி வீட்டுக்கு ஓடிச்சென்றாள். அங்கு சித்தப்பாைவ எழுப்பி பயந்தபடி அம்மாவை அண்ணன் அடிக்கிறான் என கதறி அழுது கொண்ேட கூறினாள். இதனால் பதறியடித்துக் கொண்டு சிவசக்தி மேல் தளத்தில் உள்ள வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கு ரத்த வெள்ளத்தில் யுவராணி மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதற்கிடையே தாயை தாக்கிய சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடினான்.

ரத்தவெள்ளத்தில் கிடந்த யுவராணியை சிவசக்திவேல் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே யுவராணி பரிதாபமாக இறந்தார்.

பரபரப்பு

இதுபற்றிய தகவல் அறிந்ததும் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் விரைந்து சென்று யுவராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ஈரோட்டில் இருந்து தடய அறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தடயங்களை சேகரித்தனர். அதுமட்டுமின்றி மோப்ப நாய் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் வரை ஓடிச்சென்று பின்னர் நின்று விட்டது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தாயை கொன்ற மகனை வலைவீசி தேடி வருகிறார்கள்.

பள்ளிக்கூடம் செல்ல வற்புறுத்தியதால் பெற்ற தாயை மகனே கொன்ற கொடூர சம்பவம் புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்