நிலுவை சொத்து வரியை உடனடியாக செலுத்தி 1 சதவீதம் வட்டியை தவிர்க்கலாம்; உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுரை

சொத்து வரி நிலுவை வைத்துள்ள உரிமையாளர்கள் உடனடியாக அவற்றை செலுத்தி 1 சதவீதம் வட்டியை தவிர்க்குமாறு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

Update: 2023-06-27 04:49 GMT

நிலுவை சொத்துவரி

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகளின் படி 2022-23-ம் அரையாண்டுக்குரிய சொத்துவரியை, கடந்த மார்ச் 31-ந் தேதிக்குள் செலுத்தாத சொத்து உரிமையாளர்கள் மற்றும் நீண்ட காலமாக சொத்துவரி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள சொத்து உரிமையாளர்கள் தற்போது, செலுத்த வேண்டிய நிலுவை சொத்துவரியை உடனடியாக செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அரையாண்டு காலத்துக்குரிய சொத்துவரியை செலுத்தாதவர்கள் நிலுவை வைத்துள்ள வரித்தொகை மீது, மாதத்துக்கு 1 சதவீதம் தனிவட்டியுடன் சேர்த்து செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. 13 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்களில், நிலுவை சொத்துவரி செலுத்தாத 3½ லட்சத்துக்கு மேற்பட்ட சொத்து உரிமையாளர்களுக்கு நிலுவை வரித் தொகை மீது 1 சதவீதம் தனிவட்டி விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, நிலுவை வைத்துள்ள சொத்து உரிமையாளர்கள், செலுத்த வேண்டிய நிலுவை சொத்துவரியை உடனடியாக செலுத்தி, மாதம் தோறும் விதிக்கப்படவுள்ள 1 சதவீதம் தனிவட்டி விதிப்பினை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்