பாக்ஸ்கான் நிறுவனம் காஞ்சீபுரத்தில் ரூ.1,600 கோடி முதலீடு: முதல்-அமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

பாக்ஸ்கான் நிறுவனம் காஞ்சீபுரம் மாவட்டத்தில் ரூ.1,600 கோடி முதலீடு செய்கிறது. இதன்மூலம் 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதற்கான ஒப்பந்தம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

Update: 2023-08-01 00:29 GMT

சென்னை,

தைவான் நாட்டின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் பாக்ஸ்கான்.

இந்த நிறுவன தொழிற்சாலை தற்போது காஞ்சீபுரத்தில் செயல்பட்டு வருகிறது.

ரூ.1,600 கோடி முதலீடு

பாக்ஸ்கான் நிறுவனம் காஞ்சீபுரத்தில் ரூ.1,600 கோடி முதலீட்டில் புதிதாக மொபைல் உதிரிபாக தொழிற்சாலை அமைக்க இருக்கிறது.

இதற்கான ஒப்பந்தம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பாக்ஸ்கானின் புதிய முதலீடு

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யங் லியு சந்தித்து, தமிழ்நாட்டில் அந்த நிறுவனம் மேற்கொண்டு வரும் புதிய முதலீடுகள் குறித்து பேசினார். இந்த சந்திப்பின்போது தொழில், வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, தொழில், வர்த்தகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் விஷ்ணு, பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சைய் சியாங், பொதுமேலாளர் பாப் சென், தலைமை அலுவலக இயக்குனர் செந்தில்குமார், இந்திய பிரதிநிதி லீ, இணை மேலாளர் ஹன்னா வேங் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

அப்போது ரூ.1,600 கோடி முதலீடு செய்வது தொடர்பான ஒப்பந்தம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மு.க.ஸ்டாலின்

பாக்ஸ்கான் முதலீடு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

பாக்ஸ்கான் குழும தலைவர் யங் லியு-வையும், அவரது அணியினரையும் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி அடைந்தேன். தமிழ்நாட்டில் தொடங்க சாத்தியமுள்ள பல்வேறு முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இந்த சந்திப்பில் கலந்தாலோசிக்கப்பட்டது. 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.1,600 கோடி முதலீட்டில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொபைல் உதிரிபாக தயாரிப்பு தொழிற்சாலையை நிறுவிடுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் எனது முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் மின் வாகனங்கள் மற்றும் மின்னணு உதிரிபாகங்கள் துறை சார்ந்த முதலீடுகள் குறித்தும் கலந்தாலோசித்தோம். மின்னணு பொருட்கள் உற்பத்தி துறையில் ஆசியாவின் புதிய உற்பத்தி மையமாக தமிழ்நாட்டை உயர்த்தும் நம் லட்சியத்தின் மற்றுமொரு மைல்கல்லாக இச்சந்திப்பு அமைந்தது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முதலீட்டாளர்கள் நம்பிக்கை

தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட தகவலில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வழிகாட்டி நிறுவனத்துடன் பாக்ஸ்கான் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டு கையெழுத்திட்டுள்ளது. அதன்படி காஞ்சீபுரம் மாவட்டத்தில் ரூ.1,600 கோடி செலவில் புதிய செல்போன் உபகரணங்கள் உற்பத்தி வசதியை ஏற்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 6 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

தமிழகத்தில் பாக்ஸ்கான் நிறுவனம் மீண்டும் மீண்டும் முதலீடு செய்வதும், விரிவாக்க திட்டத்தை செயல்படுத்துவதும், உலகத்திலேயே மிகப்பெரிய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு தமிழகத்தையே தேர்வு செய்கின்றன என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது. இது தமிழகத்தின் மிகப்பெரிய சாதனையாகும்.

தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக நல்ல வெற்றியை கண்டு வரும் உற்பத்தியாளர்களுக்கு, தமிழகத்தில் அதிக முதலீடு செய்தால்தான் அதிக லாபத்தை ஈட்ட முடியும் என்பது தெரியும். இது தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது உலக முதலீட்டாளர்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்து கிறது.

முன்னிலையில் தமிழகம்

தமிழகத்தில் செய்யப்படவுள்ள இந்த முதலீடும், இன்னும் வரவுள்ள முதலீடுகளும், இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் பொருள் ஏற்றுமதியில் முன்னிலையில் தமிழகம் உள்ளது என்பதை மட்டுமல்லாமல், வரும் ஆண்டுகளில் அதன் ஏற்றுமதியை பெருமளவில் உயர்த்த முடியும் என்பதையும் காட்டுகிறது. இது, தமிழக பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்த வேண்டும் என்ற முதல்-அமைச்சரின் நோக்கத்தை அடைவதில் முக்கிய பங்காற்றும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்