பட்டத்துளசி அம்மன் கோவில் தேர்த்திருவிழா
கூடலூரில், பட்டத்துளசி அம்மன் தேர்த்திருவிழா நடைபெற்றது.
கூடலூர்
கூடலூரில், பட்டத்துளசி அம்மன் தேர்த்திருவிழா நடைபெற்றது.
பட்டத்துளசி அம்மன்
கூடலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பட்டத்துளசி அம்மன் கோவில் வருடாந்திர தேர்த்திருவிழா கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி அன்றைய தினம் அதிகாலை 4.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும், தொடர்ந்து மகா கணபதி ஹோமமும் நடைபெற்றது. காலை 9:30 மணிக்கு கொடியேற்றுதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து காப்பு கட்டுதல் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. 6-ந் தேதி காலை 6 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகளும், 11 மணிக்கு ஏராளமான பக்தர்கள் பால் குட ஊர்வலமும் நடந்தது.
தேர் வீதி உலா
இதைத்தொடர்ந்து மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. 7-ந் தேதி காலை 6 மணிக்கு அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகளும், இரவு 8 மணிக்கு மேல் கூடலூர் கங்கை கரையில் இருந்து அலங்கரிக்கப்பட்ட புஷ்ப கரகங்கள் எடுத்து அம்மனை கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு அம்மனுக்கு விசேஷ பூஜைகளும், இரவு 8 மணிக்கு மேள- தாளங்கள் முழங்க அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
மாவிளக்கு பூஜை
கோவிலில் இருந்து புறப்பட்ட திருத்தேர் மேல் கூடலூர் மாரியம்மன், கூடலூர் சக்தி விநாயகர் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள் பெற்றது. பின்னர் முக்கிய சாலைகள் வழியாக சிவ சண்முக நகர் நாகராஜா கோவிலுக்கு சென்றது. தொடர்ந்து சக்தி முனீஸ்வரர் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள் பெற்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. நேற்று காலை 6 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு மாவிளக்கு பூஜையும், இரவு 8 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.