பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2023-05-01 19:00 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சித்திரை திருவிழா

கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட யானை முன் செல்ல நாடார் உறவின் முறை சங்க தலைவர் ஏ.பி.கே. பழனிச்செல்வம், கோவில் தர்மகர்த்தா எஸ்.எம்.மாரியப்பன் மற்றும் நிர்வாக குழுவினர், மஞ்சள் நீராட்டு இளைஞர்கள் மங்களப் பொருட்களுடன் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. பின்னர் பெண்கள் மஞ்சள் பால், புனித நீர் கொடி மரத்திற்கு ஊற்றி வழிபட்டனர்.

பால்குடம்

விழாவையொட்டி தினமும் இரவு 7 மணிக்கு அம்மன் வீதி உலா வருதல், பக்தி சொற்பொழிவு, இரவு 8 மணிக்கு கலை நிகழ்ச்சி, பட்டிமன்றம் நடக்கிறது.

வருகிற 9-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு நந்தவனத்திலிருந்து பால்குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சி, 10 மணிக்கு பால் அபிஷேகம், தீபாராதனை, மாலை 5 மணிக்கு பெண்கள் மாவிளக்கு ஏந்தி ஊர்வலமாக வருதல், 5.30 மணிக்கு 51 அக்கினி சட்டி எடுத்து வருதல், இரவு 7 மணிக்கு அம்மன் தங்க குடம், வாளி ஏந்தி தீர்த்தம் எடுக்கும் கோலத்தில் வீதி உலா வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

10-ந் தேதி (புதன்கிழமை) காலையில் பொங்கலிடும் நிகழ்ச்சியும், மாலை 3 மணிக்கு கோவில் முன்பு மஞ்சள் நீராட்டு விழாவும், 6 மணிக்கு முளைப்பாரி ஊர்வலத்துடன் அம்மன் பல்லக்கில் கோவிலை சுற்றி வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 11-ந் தேதி (வியாழக்கிழமை) இரவு 9 மணிக்கு வில்லிசை நிகழ்ச்சி, 12-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு 1,008 விளக்கு பூஜை நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்