தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் சிலுவை பாதை வழிபாடு

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் புனிதவெள்ளியை முன்னிட்டு நேற்று சிலுவைப்பாதை வழிபாடு நடந்தது. தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் நடந்த சிலுவைப்பாதை வழிபாட்டில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Update: 2023-04-07 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் புனிதவெள்ளியை முன்னிட்டு நேற்று சிலுவைப்பாதை வழிபாடு நடந்தது. தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் நடந்த சிலுவைப்பாதை வழிபாட்டில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

புனிதவெள்ளி

ஏசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகள் மற்றும் மரணத்தை நினைவுக்கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் 40 நாட்கள் தவக்காலம் அனுசரித்து வருகின்றனர். இந்த ஆண்டுக்கான தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி சாம்பல் புதன் வழிபாட்டுடன் தொடங்கியது. தவக்காலத்தின் கடைசியில் ஏசு உயிர்நீத்த தினமான புனித வெள்ளி நேற்று கடைபிடிக்கப்பட்டது. புனித வெள்ளியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் சிலுவைப் பாதை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

சிலுவைப்பாதை

தூத்துக்குடி தூய பனிமய மாதா ஆலயத்தில் ஏசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை நினைவுகூறும் வகையில் ஏசு சிலுவையைச் சுமப்பது போன்ற சொரூபம் ஆலயத்தைச் சுற்றி பவனியாக எடுத்து வரப்பட்டது. இந்த சிலுவைப் பாதை ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆலய பங்குத்தந்தை குமார் ராஜா தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

திருஇருதய ஆலயம்

இதே போன்று தூத்துக்குடி திருஇருதய ஆலயத்தில் தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவைப்பாதை வழிபாடு நடந்தது. மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஆலயஙங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இந்த வழிபாடுகளில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர். பிரார்த்தனைக்கு பிறகு ஆலயங்கள் மூடப்பட்டன. நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) நள்ளிரவு அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.

ஆறுமுகநேரி

ஆறுமுகநேரி புனித சவேரியார் ஆலயத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவைப்பாதை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதனை ஆறுமுகநேரி பங்குத்தந்தை அலாசியஸ் அடிகளார் மற்றும் தூத்துக்குடி மறைமாவட்ட பொருளாளர் சகாயம் அடிகளார் ஆகியோர் நிறைவேற்றினர். இதில் ஆறுமுகநேரி, ராஜமன்னியபுரம், சோனகான்விளை, காணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

காயல்பட்டினம்

இதே போல் காயல்பட்டினம் கொம்புத்துறை புனித முடிப்பர் ஆலயத்தில் புனித வெள்ளி சிலுவை பாதை வழிபாடு பங்கு சந்தை பிரதீஷ் அடிகளார் தலைமையில் நடைபெற்றது. காயல்பட்டினம் சிங்கித்துறை செல்வமாதா ஆலயத்தில் சுதாகர் அடிகளார் தலைமையில் சிலுவ பாதை சிறப்பு வழிபாடுகள் நடத்தினார். சேர்ந்தபூமங்கலம் புனிதமிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் செல்வன் அடிகளார் புனித வெள்ளி சிலுவைப்பாதை வழிபாட்டினை நடத்தினார்.

பழையகாயல்

பழைய காயல் பரிபூரணமாதா ஆலயத்தில் பங்குத்தந்தை வினிஸ்டன் அடிகளார் தலைமையில் சிலுவைப்பாதை மற்றும் புனித வெள்ளி வழிபாடுகள் நடைபெற்றன. புன்னக்காயல் தூய ராஜகன்னிமாதா ஆலயத்தில் சிலுவை பாதை மற்றும் முத்தம் செய்தல் நிகழ்ச்சிகள் புன்னக்காயல் பங்குத்தந்தை பிராங்கிளின்அடிகளார், உதவி பங்குச் சந்தை ஜெபஸ்டின் அடிகளார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இதேபோல் ஆறுமுகநேரி, காயல்பட்டினம், ஆத்தூர், பகுதிகளில் உள்ள சி.எஸ். ஐ. ஆலயங்களில் புனித வெள்ளி வழிபாடும் மூன்று மணி தியானமும் நடைபெற்றது. ஆறுமுகநேரி பூவரசூர் பரி திருத்துவ ஆலயத்தில் சேகர குரு சுதாகர் தலைமையிலும், மடத்துவிளை தூய யோவான் ஆலயத்தில் ஆறுமுகநேரி சேகரகுரு சிமியோன் பிரபு டானியல் தலைமையிலும், ரத்னாபுரி தூய அந்திரேயா ஆலயம், அருணாசலபுரம் மிகாவேல் ஆலயம், ஆத்தூர் கிறிஸ்து ஆலயத்திலும் பகல் 12 மணி முதல் மூன்று மணி வரை தியான ஜெபங்கள் நடைபெற்றன. இதில் காயல்பட்டினம் சேகரகுரு ஞானசிங் எட்வின் தலைமையில் ஜெபம் நடைபெற்றது. ஆறுமுகநேரியில் உள்ள சுப்பிரமணியபுரம் பவுலின் ஆலயத்திலும், ராஜமன்னியபுரம் பரி திருத்துவ ஆலயத்திலும் மூன்று மணி ஜெபம் நடைபெற்றது.

சாயர்புரம்

சாயர்புரம், நடுவகுறிச்சி சுப்பிரமணியபுரம், செபத் தையாபுரம், புளியநகர், நட்டாத்தி, சேர்வைக்காரன்மடம், தங்கம்மாள்புரம், கூட்டாம்புளி, குலையன்கரிசல் புதுக்கோட்டை, முடிவைத்தானந்தல், பேரூரணி, மறவன்மடம், செந்தியம்பலம், கோவங்காடு, மஞ்சள்நீர்காயல், ஜெபஞானபுரம், சக்கம்மாள்புரம், கட்டாலங்குளம், குமாரபுரம், முள்ளன்வினள, லூக்காபுரம், திருப்பணிசெட்டிகுளம், வளசக்காரன்வினள, கொம்பு காரன்பொட்டல், சின்ன நட்டாத்தி பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்