தளி,
மேற்கு தொடர்ச்சி மலையில் சாரல் மழை பெய்து வருவதால், பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பஞ்சலிங்க அருவி
உடுமலையை அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஒரே குன்றில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். அது தவிர சப்தகன்னிகள், விநாயகர், சுப்பிரமணியர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட கடவுள்கள் அருள்பாலித்து வருகின்றனர். கோவிலில் கிருத்திகை, பிரதோஷம், அமாவாசை, சிவராத்திரி, பவுர்ணமி, நவகிரக பெயற்சி உள்ளிட்ட நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ளவும் பஞ்சலிங்க அருவியில் குளித்து புத்துணர்வு பெறவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்திமலைக்கு வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் வானம் மேகமூட்டமாக காணப்படுவதுடன் சில்லென்ற காலநிலை நிலவி வருகிறது. இதனால் அருவிக்கு நீர்வரத்து அதிகரிக்கக் கூடிய சூழல் உருவானது. அதைத்தொடர்ந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
நீர்வரத்து கண்காணிப்பு
இதனால் திருமூர்த்தி மலைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
மேலும் கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டதால் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்தே காணப்படுகிறது.மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்யக்கூடும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.
அதற்கு தகுந்தாற் போன்ற சூழ்நிலை நிலவி வருவதால் அருவிக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை கோவில் நிர்வாகத்தினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தற்போது அருவியின் நீர்வரத்து இயல்பு நிலையில் சப்தகன்னிகள் எழுந்தருளியுள்ள பகுதியை தழுவியவாறு திருமூர்த்தி அணையை அடைந்த வண்ணம் உள்ளது.