வைகாசி பெருவிழாவையொட்டி பாடலீஸ்வரர் கோவில் தேரோட்டம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர் !
வைகாசி பெருவிழாவையொட்டி கடலூர் பாடலீஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் மிக பழமை வாய்ந்ததும், பிரசித்தி பெற்றதுமான பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி பெருவிழா 13 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதைத்தொடர்ந்து தினசரி இரவு சிம்மம், நாகம், காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் சாமி வீதிஉலா நடைபெற்றது. மேலும் 29-ந்தேதி தெருவடைச்சான் உற்சவமும், 30-ந்தேதி வெள்ளி ரத வாகனத்தில் வீதிஉலாவும், 31-ந்தேதி திருக்கல்யாணமும் நடந்தது.
தேரோட்டம்
வைகாசி பெருவிழாவின் 9-ம் நாளான நேற்று காலையில் தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணி அளவில் பாடலீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பஞ்சமூர்த்திகளுக்கு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர்.
பின்னர் தேரின் சக்கரங்களுக்கு பூஜைகள் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து காலை 8.30 மணி அளவில் தேரோட்டத்தை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், மாநகராட்சி மேயர் சுந்தரி ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இதையடுத்து பாடலீஸ்வரா... பரமேஸ்வரா... என்ற பக்தர்களின் பக்தி கோஷத்துடன் தேர் வலம் வந்தது. இதில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் பிரியாவிடையுடன் பாடலீஸ்வரரும், சிறிய தேரில் அம்மனும், மற்றொரு தேரில் முருகப்பெருமானும் ராஜவீதிகளில் வலம் வந்தனர்.
போக்குவரத்து மாற்றம்
திருப்பாதிரிப்புலியூர் தேரடி தெருவில் இருந்து புறப்பட்ட தேரானது சுப்புராய செட்டித்தெரு, சங்கர நாயுடு தெரு, சஞ்சீவிநாயுடு தெரு, போடி செட்டித்தெரு வழியாக மதியம் 12.30 மணி அளவில் நிலையை வந்தடைந்தது. முன்னதாக தேர் வலம் வந்த ராஜவீதிகளில் பல்வேறு அமைப்பினர் பக்தர்களுக்கு நீர், மோர் மற்றும் அன்னதானம் வழங்கினர். மேலும் தேரோட்டம் நடந்த போது திருப்பாதிரிப்புலியூரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.
மேலும் போலீஸ் ராஜாராம் மேற்பார்வையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இன்று திருக்கல்யாணம்
10-ம் நாள் திருவிழாவான இன்று (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு நடராஜர் தரிசனம் மற்றும் திருக்கல்யாணமும், இரவு 10 மணி அளவில் பஞ்சமூர்த்திகள் முத்துபல்லக்கில் வீதி உலாவும் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.