வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கடும் அவதி

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் கடைகள், ஏ.டி.எம். மையம் இல்லாததால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

Update: 2022-09-11 17:00 GMT

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் கடைகள், ஏ.டி.எம். மையம் இல்லாததால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

புதிய பஸ் நிலையம்

வேலூர் புதிய பஸ் நிலையம் தற்போது முழுவதும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் அங்கு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்படாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பஸ் நிலையத்தில் 80-க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டுள்ளது. அந்த கடைகள் அனைத்தும் திறக்கப்படாமல் உள்ளது. மாநகராட்சி சார்பில் கடைகள் ஏலம் விடப்படவில்லை. மேலும், கடைக்கு அதிகப்படியான வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் புகார் கூறப்படுகிறது.

பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பஸ் நிலையத்துக்கு வெளியே செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் இரவு நேரங்களில் பெண்கள் பலர் அவதிப்படுகின்றனர். ஓட்டல் இல்லாததால் சாப்பிட முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் பஸ் நிலையத்தில் ஏ.டி.எம். மையமும் இல்லை. எனவே பணம் எடுக்க வெகு தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

ஏ.டி.எம். மையம்

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், புதிய பஸ் நிலையத்துக்கு வரும்போது சில ஆட்டோ டிரைவர்கள் செல்லியம்மன் கோவில் சைக்கிள் ஷெட் பகுதியிலேயே இறக்கிவிடுகின்றனர். அவர்கள் தங்களது உடைமைகளை தூக்கிக்கொண்டு நடந்து உள்ளே செல்ல வேண்டிய நிலை உள்ளது. பின்பக்கம் வழியாக ஆட்டோ டிரைவர்கள் பயணிகளை இறக்கி விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஏ.டி.எம். மையம் இல்லாததால் அவசர தேவைக்கு பணம் எடுக்க முடியாத நிலை காணப்படுகிறது. அங்கு ஏ.டி.எம். மையம் அமைக்க வேண்டும்.

சிலர் பஸ் நிலைய வளாகத்திலேயே சிறுநீர் கழிக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பயணிகள் ஓய்வறையை முழுமையான பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும். கடைகள் விரைவில் திறக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். கடைகள் இல்லாமல் மிகவும் சிரமமாக உள்ளது என்றனர்.

போக்குவரத்து நெரிசல்

வேலூர் புதிய பஸ் நிலையம் பகுதியில் செல்லியம்மன் கோவில் சைக்கிள் ஷெட் முன்பு உள்ள சாலையில் தடுப்புகளை வைத்து அந்த சாலையை போலீசார் அடைத்து வைத்துள்ளனர். எனவே அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இது தெரியாமல் புதிய பஸ் நிலையத்துக்கு அந்த சாலை வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள், ஆட்டோக்கள், கார்கள் சிக்கிக் கொண்டன. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர். அருகில் உள்ள கோவிலுக்கும் செல்ல முடியாமல் பக்தர்களும் சிரமப்பட்டனர்.

காட்பாடியில் இருந்து வரும் பஸ்கள் செல்லியம்மன் கோவில் அருகே உள்ள பாதை வழியாக புதிய பஸ் நிலையத்துக்குள் செல்கிறது. அந்த நேரத்தில் உள்ளே இருந்து வெளியே பஸ்கள் வரும்போது அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே காட்பாடி பகுதியில் இருந்து வரும் பஸ்களை கிரீன் சர்க்கிள் சென்று காட்பாடி சாலை வழியாக பஸ் நிலையத்துக்குள் வரும்படி செய்ய வேண்டும்.

செல்லியம்மன் கோவில் அருகே உள்ள சைக்கிள் ஷெட் சாலையை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்