ஊருக்கு செல்ல பஸ், ரெயில் நிலையங்களில் குவிந்த பயணிகள்
ஊருக்கு செல்ல பஸ், ரெயில் நிலையங்களில் பயணிகள் குவிந்தனர்.
காலாண்டு விடுமுறை
கடந்த 4-ந் தேதி ஆயுத பூஜை, 5-ந் தேதி விஜயதசமி பண்டிகை கொண்டாடப்பட்டதால் 2 நாட்களும் விடுமுறை தினங்களாகும். மேலும், பள்ளிகளில் காலாண்டு தேர்வு முடிந்து கடந்த 1-ந் தேதி முதல் விடுமுறை விடப்பட்டதால் வெளியூர்களில் தங்கி இருந்த பெரும்பாலானவர்கள் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்றனர். வெளியூரில் தங்கி அரசு அலுவலகங்கள், தனியார்துறையில் வேலை பார்த்து வந்தவர்களும் ஆயுத பூஜை பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட ஊருக்கு புறப்பட்டு வந்தனர்.
ஆயுதபூஜை மற்றும் காலாண்டு விடுமுறை முடிந்ததையொட்டி இன்று (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து ஊருக்கு செல்வதற்காக திருச்சியில் மத்திய பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் நேற்று இரவு அதிகமாக இருந்தது. தமிழகத்தின் மையப்பகுதியில் திருச்சி மாவட்டம் அமைந்துள்ளதால் அதிகமானோர் திருச்சிக்கு வந்தே, பிற பகுதிகளுக்கு மாறிச்செல்ல வேண்டியது இருந்தது.
பயணிகள் கூட்டம்
மேலும், திருச்சியில் இருந்து சென்னை, திருப்பூர், கோவை, ஈரோடு, மதுரை, நெல்லை உள்பட பல்வேறு ஊர்களுக்கும் அதிகளவில் பஸ்கள் இயக்கப்பட்டன. வழக்கத்தைவிட நேற்று இரவு பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் மத்திய பஸ்நிலையம், சத்திரம் பஸ் நிலையம் மற்றும் ஜங்ஷன் பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
நேற்று மாலை முதல் இரவு வரை அவ்வப்போது விட்டு, விட்டு மழையும் பெய்ததால் ரெயில், பஸ் நிலையத்துக்கு செல்வோர் அவதிக்குள்ளாகி நனைந்தபடியே சென்றனர். மேலும், தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் திருச்சி கோட்டை கடைவீதி பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.