மரக்காணம் அருகே சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து பயணிகள் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்

மரக்காணம் அருகே சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.

Update: 2023-06-21 18:45 GMT

பிரம்மதேசம், 

மரக்காணம் அடுத்த நடுக்குப்பத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு திண்டிவனம் நோக்கி நேற்று மதியம் தனியார் பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ்சை விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்த செல்வம் (வயது 35) என்பவர் ஓட்டினார். பஸ்சில் சுமார் 10 பயணிகள் இருந்தனர்.

மதியம் 12.15 மணியளவில் மரக்காணம் அடுத்த கொளத்தூர் ஏரிக்கரை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி பயணிகள் அபயக்குரல் எழுப்பினர். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக முருக்கேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பஸ்சில் குறைவான பயணிகளே இருந்ததால் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து பிரம்மதேசம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்