கோவில்வழி பஸ் நிலையம் முன் நள்ளிரவில் பயணிகள் மறியல்
கோவில்வழி பஸ் நிலையம் முன் நள்ளிரவில் பயணிகள் மறியல்
திருப்பூர்,
பனியன் தொழில் நகரான திருப்பூரில் வெளிமாவட்ட மக்கள் அதிகம் தங்கி பணியாற்றி வருகிறார்கள். குடும்பத்துடன் திருப்பூரில் குடியேறியவர்கள் பலர். இவர்கள் சொந்த ஊரில் நடக்கும் விசேஷ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவ்வப்போது சொந்த ஊர் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். நேற்று ஓணம் பண்டிகையையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. அதுபோல் நேற்று சுபமுகூர்த்த தினம் என்பதால் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேற்று முன்தினம் இரவு சொந்த ஊர் புறப்பட்டனர்.
தென்மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் தாராபுரம் ரோடு கோவில்வழி தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் பனியன் நிறுவனங்களில் பணியை முடித்து விட்டு இரவு 10 மணிக்கு மேல் சொந்த ஊர் செல்வதற்காக கோவில்வழி பஸ் நிலையத்தில் பயணிகள் குவியத்தொடங்கினார்கள். குடும்பத்துடன் ஏராளமானவர்கள் வந்தனர். ஆனால் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேனி, மதுரை, கம்பம், திண்டுக்கல், திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதிகளுக்கு குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்பட்டன.
சாலைமறியல்
நேரம் செல்ல செல்ல பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இரவு 11 மணிக்கு மேல் தென்மாவட்ட பஸ்கள் மிக குறைந்த அளவே இயக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக தேனிக்கு பஸ் இயக்கப்படவில்லை. நள்ளிரவு 12 மணிக்கு மேலும் தேனிக்கு பஸ் வரவில்லை. குழந்தைகளோடு வந்தவர்கள் மிகவும் சிரமத்தை சந்தித்தனர். தேனிக்கு செல்வதற்கு வந்த பஸ்சில் பயணிகள் ஏறினார்கள். ஆனால் அந்த பஸ் அதிகாலை 5 மணிக்கு புறப்படும் என்று கண்டக்டர் அறிவித்தார்.
கோபமடைந்த பயணிகள் அங்கிருந்த அரசு போக்குவரத்து கழக அதிகாரியிடம் முறையிட்டனர். ஆனால் தேனிக்கு பஸ் வரும் என்று மட்டும் அவர் பதில் அளித்தார். நள்ளிரவு 12.30 மணியை தாண்டியும் பஸ் வரவில்லை. இதனால் பயணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து கோவில்வழி பஸ் நிலையம் முன் சாலையில் நின்று மறியலில் ஈடுபட்டனர். சம்பவம் பற்றி அறிந்ததும் நல்லூர் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் போலீசார் தகவல் தெரிவித்து பஸ்களை இயக்க அறிவுறுத்தினார்கள்.
விடிய, விடிய தவித்த பயணிகள்
அதிகாலை 2 மணி வரை தேனி பஸ் வரவில்லை. 300-க்கும் மேற்பட்ட பயணிகள் அங்குமிங்கும் அலைமோதினார்கள். திண்டுக்கல், மதுரைக்கு ஒன்றிரண்டு பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன. அந்த பஸ்சிலும் முண்டியடித்து பயணிகள் ஏறினார்கள். பஸ்சில் இடம் பிடிப்பதே பெரும் போராட்டமாக இருந்தது. பின்னர் தேனிக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. அதில் பயணிகள் ஏறி புறப்பட்டனர். விடிய, விடிய பயணிகள் தவித்து காத்திருந்து மிகுந்த சிரமத்தை சந்தித்தனர்.
இதுகுறித்து பயணிகள் கூறும்போது, 'பண்டிகை மற்றும் சுபமுகூர்த்த நாட்களில் தென்மாவட்டங்களுக்கு அதிக பயணிகள் செல்கிறார்கள். இதை அறிந்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். ஆனால் நள்ளிரவில் 1 மணி நேரத்துக்கு ஒரு பஸ் கூட இயக்காமல் உள்ளனர். கைக்குழந்தையுடன் வரும் பெண்கள் குழந்தைகளுக்கு உணவு கிடைக்காமல் மிகுந்த சிரமத்தை சந்திக்க வேண்டியுள்ளது. அதிகாரிகள் முறையான பதில் அளிப்பதில்லை. 3 மணி நேரத்துக்கும் மேலாக பஸ் நிலையத்தில் காத்திருந்து கடும் சோதனையை சந்தித்தனர். இது புதிதல்ல. இதுபோல் அடிக்கடி நடக்கிறது. இனிவரும் காலங்களில் தென்மாவட்டங்களுக்கு பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து கூடுதல் பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை வேண்டும்' என்று கோரிக்கை வைத்தனர்.
--