ஆபத்தான நிலையில் பயணிகள் நிழலக கட்டிடம்

கோவிலூரில் ஆபத்தான நிலையில் உள்ள பயணிகள் நிழலக கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-07-07 18:45 GMT

முத்துப்பேட்டை:

கோவிலூரில் ஆபத்தான நிலையில் உள்ள பயணிகள் நிழலக கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பயணிகள் நிழலகம்

முத்துப்பேட்டையை அடுத்த கோவிலூர் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து பிரிந்து செல்லும் பகுதியில் கோவில் ஆர்ச் அருகே பயணிகள் நிழலகம் உள்ளது. இந்த கட்டிடம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

இந்த பயணிகள் நிழலகத்தை இந்த கிராம மக்கள் மட்டுமின்றி சுற்றுப்பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆபத்தான நிலையில் உள்ளது

மேலும் மாணவர்கள் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கும், அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி போன்ற பகுதிகளில் உள்ள கல்லூரிகளுக்கும் சென்று வருகின்றனர்.

இந்த பயணிகள் நிழலக கட்டிடம் தற்போது சேதமடைந்துள்ளது. மேற்கூரையில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது.

இந்த பயணிகள் நிழலக கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் இந்த பயணிகள் நிழலகத்தை பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. பஸ்சுக்காக மழை, வெயிலில் பொதுமக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சீரமைக்க வேண்டும்

இதேபோல் கட்டிடத்தின் உள்ளே இருக்கைகள் சேதமடைந்து செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் இந்த பயணிகள் நிழலகத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது.

இந்த பயணிகள் நிழலக கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபத்து ஏற்படுவதற்கு முன்பு ஆபத்தான நிலையில் உள்ள பயணிகள் நிழலக கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் அல்லது இடித்து விட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்