இது என்ன நெல்லிக்குப்பத்துக்கு வந்த சோதனை? ரூ.9 லட்சத்தில் அமைத்த பயணிகள் நிழற்குடை மாயம் கண்டுபிடித்து தர மக்கள் கோரிக்கை
நெல்லிக்குப்பத்தில் ரூ.9 லட்சத்தில் அமைத்த பயணிகள் நிழற்குடை மாயம் கண்டுபிடித்து தர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நெல்லிக்குப்பம்! இந்த ஊர் பெயரை சொன்னாலே ஒரு ஆச்சரியம் தான். ஏனெனில், இந்த ஊருக்கும் பஸ் நிலையத்துக்கும் எப்போதும் ஒரு பிணைப்பே இருந்தது கிடையாது.
பயணிகள் நிகழற்குடை மாயம்
அதற்கு உதாரணம் ரூ.1 கோடியில் கட்டப்படடுள்ள பஸ்நிலையம் யாருக்கும் பயன்படாமல் கிடக்கும் நிலையாகும். இது ஒரு பெரிய கதை என்றாலும், தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நகரில் அரங்கேறி இருக்கிறது. அது என்னவெனில் ரூ.9 லட்சத்தில் தற்போது புதிதாக நகரில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையே மாயமாகி விட்டது.
என்ன இது நெல்லிக்குப்பத்துக்கு வந்த சோதனை. ஒரு பஸ்நிலையம் இருக்கு ஆனால் இல்லை, என்ற நிலையில் உள்ளது. மற்றொரு பக்கம் ஒத்தையாக நின்றுமழையிலும், கடும் வெயிலிலும் மக்களை காத்து வந்த பயணிகள் நிழற்குடையை காப்பதற்கு யாரும் இல்லாமல் போய்விட்டதால், இன்று இருந்த இடமே தெரியாமல் போய்விட்டது பயணிகள் நிழற்குடை.
அங்கு இருந்த இருக்கைள், மேற்கூரைகள், அதை தாங்கி நின்ற கம்பிகள் என்று கத்தையாக அனைத்து பொருட்களும் மாயமாகிவிட்டது. இதனால் நிழற்குடையை கண்டுபிடித்து தருமாறு அந்த பகுதிவாசிகள் வலியுறுத்தி வருகிறார்கள். அதுபற்றிய விவரத்தை இங்கு பாாப்போம்:-
சாலை விரிவாக்கம்
வளர்ந்து வரும் நகரங்களின் தலையாய பிரச்சினையாக இருப்பது போக்குவரத்து நெரிசலே. இதனால் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடலூர் கோண்டூர்-மடப்பட்டு சாலை விரிவாக்க பணியும் நடக்கிறது. இதற்காக ரூ.230 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த 8 மாதமாக சாலையின் இருபுறமும் வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டும், சாலையோர கட்டிடங்கள் இடிக்கப்பட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
ரூ.9 லட்சம்
இதில் நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையம் அருகே பஸ் நிறுத்தத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் நிழற்குடை சிமெண்டு மேற்கூரையால் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.9 லட்சம் மதிப்பில் புதிதாக பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டது.
இந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் அமர்வதற்கு ஏதுவாக நாற்காலி, வெயில் மற்றும் மழைக்காலங்களில் மக்கள் பாதிக்கப்படாத வகையில் கொட்டகை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் சாலை விரிவாக்க பணிக்காக இருபுறமும் நெடுஞ்சாலை துறை சார்பில் வடிகால் வாய்க்கால் கட்டும் பணி நடைபெற்ற காரணத்தால் தற்காலிகமாக பஸ் நிறுத்தம் நிழற்குடை அகற்றுவதாக கூறி அதிகாாிகள் அகற்றினர்.
குப்பையில் வீச்சு
இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு வடிகால் கட்டும் பணி முழுமையாக நடைபெற்று முடிந்தது. ஆனால் தற்போது வரை பயணிகள் நிழற்குடை மீண்டும் அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள், முதியோர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் வெயிலிலும், மழையிலும் கால்கடுக்க காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
மேலும் அதே இடத்தில் பயணிகள் நிழற்குடை வரக்கூடாது என்பதற்காக, பயணிகள் நிழற்குடைக்கான மேற்கூரையை நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் உடைத்து சேதப்படுத்தி குப்பையில் வீசி உள்ளனர். தற்போது அந்த மேற்கூரையை சுற்றிலும் முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. அதேபோல் அங்கு இருந்த இருக்கைகளையும் காணவில்லை. யாரோ அதை திருடி சென்றுவிட்டனர். இதனால் நெல்லிக்குப்பம் மக்கள் சாலையோரம் காத்திருந்து பஸ் ஏறி செல்ல வேண்டிய நிலை உள்ளது.
அதிகாரிகள் அலட்சியம்
இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், நாங்கள் நகராட்சி அதிகாரியிடம் தெரிவித்து விட்டு தான் பயணிகள் நிழற்குடையை அகற்றினோம். தற்போது எங்களது பணிகள் முடிந்து விட்டது. அதனால் நெல்லிக்குப்பம் நகராட்சி அதிகாரிகள் தான், அதனை மீண்டும் அமைக்க வேண்டும். இதற்கு நாங்கள் எப்படி அந்த பணிகளை மேற்கொள்வது என அதிகாரிகள் அலட்சியமாக பதில் அளித்தனர்.
முயற்சி இல்லை
இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், சாலை விரிவாக்க பணிக்காக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பயணிகள் நிழற்குடையின் மேற்கூரையை அகற்றிவிட்டு, பணி முடிந்த பிறகு மீண்டும் அதே இடத்தில் நிழற்குடையை வைத்து விடுகிறோம் என்றனர். ஆனால் இதுநாள் வரை வைக்கவில்லை. இதற்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும் என தெரிவித்தார்.
இதனால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் நெல்லிக்குப்பம் நகராட்சி அதிகாரிகள் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் புகார் தெரிவிக்கிறார்களே தவிர, பயணிகள் நிழற்குடை அமைக்க எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.
நடவடிக்கை
இதுகுறித்து மோகன்ராஜ் என்பவர் கூறுகையில், போலீஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டு இருந்த பயணிகள் நிழற்குடை தற்காலிகமாக அகற்றப்பட்டு வடிகால் வாய்க்கால் கட்டும் பணி நடைபெற்றது. இப்பணிகள் முடிந்துள்ள நிலையில் மீண்டும் பயணிகள் நிழற்குடை அமைக்காததால் நாங்கள் பெரிதும் பரிதவித்து வருகிறோம். இது மட்டும் இன்றி கடந்த இரண்டு முறை வெவ்வேறு காரணத்திற்காக தற்காலிகமாக அகற்றப்பட்ட பயணிகள் நிழற்குடை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக அகற்றப்பட்டு தற்போது குப்பையில் வீசப்பட்டுள்ளது. மேலும் இந்த பயணிகள் நிழற்குடை அகற்றப்பட்டதற்கு அதிகாரிகள் லஞ்சம் பெற்று தனிப்பட்ட சிலருக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறப்படுகிறது. ஆகையால் பயணிகள் நிழற்குடையை உடனடியாக மீண்டும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
சாலை மறியல் நடத்தப்படும்
சமூக ஆர்வலர் குமரவேல் கூறுகையில், பஸ்சுக்காக காத்திருக்கும் மக்கள், பயணிகள் நிழற்குடையில் அமர்ந்து பஸ் வரும் வரை காத்திருந்தனர். தற்போது நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக பயணிகள் நிழற்குடை அகற்றப்பட்டது. ஆனால் மீண்டும் அமைக்காதது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதனால் பொதுமக்கள் சாலையோரம் சுட்டெரிக்கும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் காத்திருந்து பெரும் சிரமங்களுக்கு இடையே பஸ் ஏறிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதனால் வருங்காலங்களில் இதனை உடனடியாக அமைக்காவிட்டால் முதல்-அமைச்சருக்கு புகார் தெரிவிக்கப்படும். மேலும் அனைத்து கட்சி நிர்வாகிகள், பொதுமக்களை திரட்டி மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடத்துவதோடு, தற்போது சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தப்படும் என்றார்.