சீர்காழி புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் மறியல் போராட்டம்

மின் கேபிள் பதிக்கும் பணியால் டவுன் பஸ் தாமதம் ஆகிறது என கூறி சீர்காழி புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-09-04 18:45 GMT

சீர்காழி:

மின் கேபிள் பதிக்கும் பணியால் டவுன் பஸ் தாமதம் ஆகிறது என கூறி சீர்காழி புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மின் கேபிள் பதிக்கும் பணி

சீர்காழி அருகே செம்மங்குடி, கடவாசல், விநாயககுடி, வடகால், எடமணல், ராதாநல்லூர், வினாயககுடி, திருமுல்லைவாசல், கூழையார் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்திற்கு செல்லும் நெடுஞ்சாலையோரம் கடந்த சில வாரங்களாக தமிழ்நாடு மின்சார வாரிய துறை சார்பில் பள்ளம் தோண்டப்பட்டு மின் கேபிள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் கடும் போக்குவரத்திற்கு ஆளாகி வருகின்றன.

பயணிகள் போராட்டம்

இந்தநிலையில் மேற்கண்ட கிராமங்களுக்கு செல்லும் அரசு டவுன் பஸ் நேற்று இரவு காலதாமதமாக சென்று வருவதால் ஆத்திரம் அடைந்த கூழையாறு, திருமுல்லைவாசல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பயணிகள் சீர்காழி புதிய பஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து டவுன் பஸ்களையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திருமுல்லைவாசல், கூழையாறு உள்ளிட்ட கடற்கரை கிராமங்களுக்கு போதுமான பஸ்களை இயக்க வேண்டும். பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும். நெடுஞ்சாலையோரம் மின்சார கேபிள் பதிப்பதற்காக பள்ளம் தோண்டும் பணியினை துரிதப்படுத்த வேண்டும். போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் பள்ளம் தோண்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த அரசு கிளை போக்குவரத்து அதிகாரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து பயணிகள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் சீர்காழி புதிய பஸ் நிலைய வளாகத்தில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்