பயணிகளை ஏற்றுவதில் தகராறு:அரசு பஸ் கண்டக்டர் மீது தாக்குதல்
பயணிகளை ஏற்றுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வேலூரில் அரசு பஸ் கண்டக்டர் மீது தாக்குதல் நடந்தது.
பயணிகளை ஏற்றுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வேலூரில் அரசு பஸ் கண்டக்டர் மீது தாக்குதல் நடந்தது.
அரசு பஸ்
திருப்பத்தூர் அரசு போக்குவரத்து பணிமனையில் கண்டக்டராக பணியாற்றி வருபவர் விமலன் (வயது 35). இவர் கடந்த 16-ந்தேதி சென்னையில் இருந்து திருப்பத்தூர் செல்லும் அரசு பஸ்சில் பணியில் இருந்தார். மதியம் பஸ் வேலூர் புதிய பஸ்நிலையத்துக்கு வந்தது.
அப்போது அவர்களுக்கு முன்னால் திருப்பத்தூருக்கு புறப்பட்டு செல்ல வேண்டிய தனியார் பஸ்சில் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தனர். அந்த பஸ்சின் டிரைவர் அவரது நேரம் முடிவடைந்தும் அரசு பஸ்சுக்கு வழிவிடாமல் நின்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து விமலன் அவரது பஸ்சுக்கு பயணிகளை ஏற்ற தொடங்கினார்.
இதை தனியார் பஸ்சுக்கு பயணிகளை ஏற்றும் தரகர் ஒருவர் பார்த்தார். அரசு பஸ்சில் விமலன் ஏற்றிய ஒரு பயணியின் கையை பிடித்து அந்த தரகர் தனியார் பஸ்சில் ஏற்றினார். இதற்கு அந்த தனியார் பஸ் கண்டக்டரும் உடந்தையாக இருந்தார்.
கொலை மிரட்டல்
இதைப்பார்த்த விமலன் அவர்களிடம் தட்டிக்கேட்டார். அப்போது தரகரும், தனியார் பஸ் டிரைவரும் சேர்ந்து விமலனை தாக்கினர். மேலும் அவர்கள் விமலனுக்கு கொலை மிரட்டலும் விடுத்தனர். அப்போது அங்கிருந்த போக்குவரத்து கழக அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர்.
இதையடுத்து தனியார் பஸ் சென்றது. சிறிது நேரத்தில் விமலன் பணியாற்றக்கூடிய பஸ்சும் சென்றது. பஸ் நிலையம் வெளியே சென்றபோது அந்த தரகர் மற்றும் தனியார் பஸ் கண்டக்டர் ஆகியோர் சேர்ந்து மீண்டும் அரசு பஸ்சை வழிமறித்து விமலனை வெளியே இழுத்து தாக்கி, கொலை செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் பஸ் திருப்பத்தூர் நோக்கி புறப்பட்டு சென்றது.
பரபரப்பு
இந்த நிலையில் நேற்று வேலூர் புதிய பஸ் நிலையத்தில் விமலனுக்கு ஆதரவாக தொழிற்சங்கத்தினர் திரண்டனர். மேலும் அதிகாரிகளும் விசாரணைக்காக வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டு, பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக புகார் மனு அளிக்குமாறு அவர்கள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து விமலன் புகார் மனு அளித்தார்.