பகுதிநேர வேலை வழங்குவதாக மோசடி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

பகுதிநேர வேலை வழங்குவதாக மோசடி நடப்பதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

Update: 2023-10-17 22:13 GMT

பகுதிநேர வேலை வழங்குவதாக மோசடி செய்யும் கும்பலிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசார் கேட்டுக்கொண்டனர்.

மோசடி

பகுதிநேர வேலை வழங்கப்படும் என்றும், அதன் மூலமாக அதிகமான பணம் சம்பாதிக்கலாம் என்றும் சமூக வலைதளங்களில் தகவல் பரப்பப்படுகிறது. இதன் மூலமாக பொதுமக்களிடம் இருந்து சுயவிவரங்களை எளிதாக பெற்று சிலர் மோசடியிலும் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இதுபோன்ற தகவல் வரும்போது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனா்.

இதுகுறித்து ஈரோடு சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-

ஆன்லைன் வேலை மூலமாக அதிகளவில் சம்பாதிக்கலாம் என்று வாட்ஸ்-அப், டெலிகிராம், பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் மோசடி கும்பல் லிங்க் அனுப்பி வைக்கின்றனர். ஆசை வார்த்தைகளுக்கு மயங்கும் சிலர் அந்த கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்து விடுகின்றனர். வேலை தரும் நிறுவனங்கள் சார்பில் முன் பணமோ, பயிற்சி கட்டணமோ கேட்பதில்லை. அவ்வாறு கேட்டாலே அது மோசடி செயலாகத்தான் இருக்கும்.

புகார் கொடுக்கலாம்

வேலை வாய்ப்பு தரும் நிறுவனங்களின் உண்மை தன்மையை அறிந்து கொள்ளாமல் பொதுமக்கள் தங்களது சுய விவரங்களை கொடுக்கக்கூடாது. சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அதிகார பூர்வ இணையதளம் அல்லது தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். முறையான வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பதாரர்கள் முன்கூட்டியே கட்டணம் அல்லது வைப்புத்தொகை செலுத்த வேண்டிய அவசியமில்லை. அதனால் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மோசடி கும்பலிடம் ஏமாந்து பணத்தை இழந்து பாதிக்கப்பட்டு இருந்தால் உடனடியாக சைபர் கிரைம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1930-க்கு தொடர்பு கொண்டு புகார் கொடுக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்