மாமல்லபுரத்திற்கு நாடாளுமன்ற தொழில்துறை நிலைக்குழுவை சேர்ந்த எம்.பி.க்கள் வருகை
மாமல்லபுரத்திற்கு நாடாளுமன்ற தொழில்துறை நிலைக்குழுவை சேர்ந்த எம்.பி.க்கள் வருகை தந்தனர். அவர்கள் புராதன சின்னங்களை ரசித்து பார்த்தனர்.
தொழில் துறை நிலைக்குழு
ராஜஸ்தான், பீகார், குஜராத், உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், ஆந்திரா, அரியானா, பஞ்சாப், தமிழ்நாட்டை சோ்ந்த நாடாளுமன்ற தொழில்துறை நிலைக்குழுவை சேர்ந்த எம்.பி்.க்கள் 10 போ் இந்த குழுவின் தலைவர் திருச்சி சிவா எம்.பி. தலைமையில் தொழில்துறை அதிகாரிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன் நேற்று தனித்தனி கார்களில் மாமல்லபுரம் வந்தனா். கடற்கரை கோவில் நுழைவு வாயிலில் பாராளுமன்ற கமிட்டி உறுப்பினா்களை தமிழக அரசு சார்பில் செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ், திருக்கழுக்குன்றம் தாசில்தார் பிரபாகரன், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலா் சக்திவேல் ஆகியோர் வரவேற்றனா்.
கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்களை சுற்றி பார்த்து கண்டுகளித்த அவா்களுக்கு மாமல்லபுரம் சுற்றுலா வழிகாட்டி மதன் புராதன சின்னங்கள் குறித்தும், மாமல்லபுரத்தில் 7-ம் நூற்றாண்டில் துறைமுக பட்டினமாக கொண்டு ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்கள் பற்றியும், அவர்கள் பாறைகளில் செதுக்கி உருவாக்கிய குடைவரை மண்டபங்கள், ரதக்கோயில்கள் குறித்தும் விளக்கி கூறினார். பிறகு தொழில்துறை மற்றும் சுற்றுலா வளா்ச்சிப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் அந்த குழுவினர் ஆய்வு செய்தனர்.
பாதுகாப்பு
முக்கிய புராதன சின்னங்கள் முன்பு நாடாளளுமன்ற தொழில்துறை நிலைக்குழு உறுப்பினா்கள் அனைவரும் குழுவாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டனா். முன்னதாக வட மற்றும் தென் மாநில நாடாளுமன்ற தொழில்துறை நிலைக்குழு உறுப்பினா்கள் வருகையை முன்னிட்டு மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் மேற்பார்வையில், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டா் ருக்மாங்கதன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உள்ளிட்ட ஏராளமான போலீசார் கடற்கரை கோவில், வெண்ணை உருண்டை பாறை, அர்ச்சுனன் தபசு, ஐந்துரதம் உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.