நாடாளுமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீடு: தி.மு.க. - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை
இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தி.மு.க. முனைப்பு காட்டி வருகிறது. கடந்த 4-ந்தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையிலான நாடாளுமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்த முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த நிலையில் தி.மு.க. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்த 2-ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது. 2019 தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. 2024 தேர்தலில் 3 தொகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும், தி.மு.க. - இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையிலான 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.