நடைபாதையுடன் பூங்கா அமைக்க நடவடிக்கை

இலக்கியம்பட்டி ஏரியை மேம்படுத்தி நடைபாதையுடன் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.

Update: 2022-07-05 16:46 GMT

இலக்கியம்பட்டி ஏரியை மேம்படுத்தி நடைபாதையுடன் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.

இலக்கியம்பட்டி ஏரி

தர்மபுரி ஊராட்சி ஒன்றியம் இலக்கியம்பட்டி ஊராட்சியில் 4.30 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இலக்கியம்பட்டி ஏரியினை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஏரியை சூழ்ந்துள்ள ஆகாயத்தாமரை மற்றும் முட்புதர்களை பார்வையிட்ட அவர் உடனடியாக இந்த ஏரியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அப்போது கலெக்டர் கூறியதாவது:-

இலக்கியம்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள இந்த ஏரியை புனரமைத்து மேம்படுத்தினால் மழை நீர் சேகரிப்பிற்கும், பொதுமக்களின் பொழுது போக்கிற்கும் சிறந்த இடமாக அமையும். எனவே இலக்கியம்பட்டி ஏரியை புனரமைத்து மேம்படுத்தி நடைபாதையுடன் கூடிய பூங்கா அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.

பொழுதுபோக்கு அம்சங்கள்

பொதுமக்கள் பயன்பெறும் வகையில் படகு சவாரி போன்ற பொழுதுபோக்கு அம்சங்களுடன் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பணியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, தாசில்தார் ராஜராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனபால், கணேசன், உதவி பொறியாளர் துரைசாமி ஊராட்சி மன்ற தலைவர் சுதா ரமேஷ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்