மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டம்

புதுக்கோட்டை அருகே 123 ஆண்டுகள் பழமையான அரசு பள்ளிக்கு அடிப்படை வசதிகள் கேட்டு மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு வகுப்புகள் தொடங்கியது.

Update: 2023-02-22 18:12 GMT

123 ஆண்டுகள் பழமையான பள்ளி

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே நகரம் கிராமத்தில் 1,900-ம் ஆண்டு மரத்தடி பள்ளியாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. பின்னர் 1937-ம் ஆண்டு கட்டிடம் கட்டி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த பழமையான பள்ளியில் தற்போது 80 மாணவர்கள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியை, இடைநிலை ஆசிரியை என 2 ஆசிரியைகள் மட்டுமே உள்ளனர்.

வகுப்பறைகள் இல்லை

மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறை கட்டிடங்கள் இல்லை. கடந்த 2005- 2006-ம் ஆண்டு நவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்ட கட்டிடம் சில வருடங்கள் கூட பயன்படுத்த முடியாமல் சேதமடைந்ததால் அந்த கட்டிடத்தை பூட்டி வைத்துள்ளனர்.

சேதமடைந்த கட்டிடத்தின் ஒரு பக்கம் மாணவர்களை அச்சப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அதனால் அதே வளாகத்தில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்தை பள்ளி மாணவர்களுக்கான வகுப்பறையாக மாற்றி உள்ளனர். அங்கன்வாடியை சமுதாயக் கூடத்திற்கு மாற்றி விட்டனர்.

ஆபத்து

மேலும் பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் இருந்த பழைய ஓட்டுக் கட்டிடம் முழுமையாக அகற்றப்படாமல் அப்படியே கிடப்பதால் மழைக்காலங்களில் பாம்பு, பூச்சிகளின் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது. மேலும் சில கட்டிடங்களும் ஆபத்தான நிலையில் அகற்றப்பட வேண்டி உள்ளது.

அதே போல சுற்றுச்சுவர் இல்லாததால் நாய்கள் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து மாணவர்களை கடித்துள்ளது. அதனால் புதிய வகுப்பறை கட்டிடம், சுற்றுச்சுவர், பழைய கட்டிடம் அகற்றுதல், கூடுதல் ஆசிரியர் தேவை என கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்திருந்தனர்.

போராட்டம்

ஆனால் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் இன்று மாணவர்களின் பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் இணைந்து அடிப்படை வசதிகள் கிடைக்கும் வரை தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என்று மாணவர்களை பள்ளிக்குள் அனுப்பாமல் மரத்தடியில் அமர வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சண்முகம், திருவரங்குளம் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கருணாகரன், தனராணி, தாசில்தார் செந்தில்நாயகி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஒரு மாதத்தில் தீர்வு

அப்போது ஒரு மாத காலத்திற்குள் புதிய வகுப்பறை கட்டிடம், சுற்றுச்சுவர் கட்டுமான பணிகள் தொடங்கும். பழைய ஆபத்தான கட்டிடங்கள் விரைவில் இடிக்கப்படும். இடிக்கப்பட்ட கட்டிடத்தை உடனே அகற்றப்படும். மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப காலிப்பணியிடம் கணக்கிடப்பட்டு கூடுதல் ஆசிரியர் நியமனம் செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வேறு போராட்டங்களை முன்னெடுப்போம் என்று கூறிய பெற்றோர்கள் அதன் பிறகு மாணவர்களை பள்ளிக்குள் அனுப்பினார்கள். பின்னர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து பள்ளியில் வகுப்புகள் தொடங்கியது. 

Tags:    

மேலும் செய்திகள்