படிப்பின் அவசியத்தை பெற்றோர் குழந்தைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்-முன்னாள் போலீஸ் அதிகாரி கலியமூர்த்தி பேச்சு
படிப்பின் அவசியத்தை பெற்றோர் குழந்தைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று முன்னாள் போலீஸ் அதிகாரி கலியமூர்த்தி கூறினார்.
ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம்-பனைக்குளம் இடையே நதிப்பாலம் சாலையில் நஜியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் 28-வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. முதல் நாள் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள், கட்டுரை, பேச்சுப் போட்டிகள், நடனம் உள்ளிட்டவைகள் நடைபெற்றன. ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் ஏ.கலியமூர்த்தி கலந்து கொண்டார்.
பள்ளியின் சார்பில் நஜியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிறுவனர் ஹெச்.கலிபுல்லாகான், பள்ளியின் தாளாளர் பவுசுல் ஹனியா மற்றும் இவரது புதல்வி ஜவுசுன் பஹியா ஆகியோர் இணைந்து சிறப்பு விருந்தினர் டாக்டர் கலியமூர்த்திக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். விழாவில் ஏ.கலியமூர்த்தி பேசியதாவது:-
நாம் மனிதர்களை புரிந்து கொள்வது எப்படி? வாழ்வில் போராடி வெல்வது எப்படி? என்று அத்தனையும் புத்தகத்திலிருந்து தான் தெரிந்து கொள்ள முடியும். தந்தையை இழந்த தாமஸ் ஆல்வா எடிசன் தாய் அரவணைப்பில் வளர்ந்தார். வகுப்பு ஆசிரியர் கொடுத்ததாக கூறி ஒரு கடிதத்தை தாயிடம் கொடுக்க, அதை படித்து பார்த்த அவர் நீ சிறந்த புத்திசாலி. ஆசிரியராலேயே உனக்கு கற்று கொடுக்க முடியவில்லை என கூறி நூலகத்துக்கு அழைத்து சென்று படிக்க வைத்தார். பின்னாளில் அவர் பல்வேறு கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தார். தாயார் இறந்த பின்னர், ஆசிரியர் எழுதிய கடிதத்தில் அவர் ஒரு மூளை வளர்ச்சி இல்லாத முட்டாள் குழந்தை என்று எழுதியிருந்தார். ஆனால் அவரது தாயார் தாமஸ் ஆல்வா எடிசன் புத்திசாலியாக்கினார்.
எனவே படிப்பின் அவசியத்தை பெற்றோர்கள் பிள்ளைகளிடம் கண்டிப்பாக எடுத்துரைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை நஜியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் புஷ்பா ஒருங்கிணைப்பாளர்கள் உதயா, குரு லட்சுமி, பிரியா மற்றும் ஆசிரியர்கள் அலுவலகப் பணியாளர்கள் பலரும் செய்திருந்தனர். நிகழ்ச்சியின் முடிவில் பள்ளியின் தாளாளர் பவுசுல் ஹனியா நன்றி கூறினார்.