சிறந்த கல்வி அறிவு பெற்றவர்களாக மாற்ற பெற்றோர் உறுதுணையாக இருக்க வேண்டும்
இளைய தலைமுறையினரை சிறந்த கல்வி அறிவு பெற்றவர்களாக மாற்ற பெற்றோர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் அறிவுரை வழங்கினார்.
இளைய தலைமுறையினரை சிறந்த கல்வி அறிவு பெற்றவர்களாக மாற்ற பெற்றோர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் அறிவுரை வழங்கினார்.
மாணவர் சேர்க்கை
ஜமுனாமரத்தூர் ஒன்றியத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
நாளை (திங்கட்கிழமை) வரை மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்த மாணவர் சேர்க்கையை கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து 5 மாணவர்களுக்கு சேர்க்கை ஆணையினை வழங்கினார்.
அப்போது அவர் மாணவர்களிடையே பேசியதாவது:-
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மூலம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பழங்குடி இன மாணவ, மாணவிகளுக்கு தொழிற்பிரிவு வகுப்புகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.
விடுதி வசதி
அனைத்து பயிற்சியாளர்களுக்கும் மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ.750-ம், விலையில்லா மடிக்கணினி, பாட புத்தகம், வரைபடக் கருவிகள், சீருடைகள், மூடுகாலணி, இலவச பஸ் கட்டண சலுகை ஆகியவை வழங்கப்படுகிறது.
மாணவர்கள் தங்கி பயில விடுதி வசதிகள் உள்ளன. அரசு பள்ளி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும்.
தொழிற்பயிற்சி நிலையத்தில் பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளன. மாணவ, மாணவிகள் தங்கள் மதிப்பெண் அடிப்படையில் தொழிற் பயிற்சி நிலையத்தில் சேர்ந்து கல்வி பயின்று வாழ்க்கையில் நல்ல நிலையை அடைய வேண்டும்.
தனி மனிதன் கல்வி அறிவு பெற்றால் குடும்பம் வளர்ச்சி அடையும், குடும்பம் வளர்ச்சி அடைந்தால் கிராமம் வளர்ச்சி அடையும், கிராமம் வளர்ச்சி அடைந்தால் நாடு வளர்ச்சி அடையும்.
குழந்தை திருமணம்
எனவே கல்வி என்பது இன்றியமையாத ஒன்றாகும். மேலும் இப்பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் உயர் கல்வி செல்வதை தொடர வேண்டும். இப்பகுதியில் குழந்தை திருமணம் அதிகம் நடைபெறுகிறது.
அதை தடுக்கும் வகையில் துறை அலுவலர் மூலம் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்த படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு விழிப்புணர்வு செய்வதன் மூலம் குழந்தை திருமணம் தடுக்க முடியும்.
மாணவ, மாணவிகளாகிய நீங்கள் எதிர்காலத்தில் எந்த உயர் பொறுப்பை அடைய வேண்டும் என லட்சியத்தை உருவாக்கி கொள்ள வேண்டும். அதற்கான முயற்சியை தேட வேண்டும்.
அதேபோல் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிகள் மற்றும் உயர்கல்வி பயில அனுப்புவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அப்போதுதான் இந்த இளைய தலைமுறையினரை சிறந்த கல்வி அறிவு பெற்ற தலைமுறையினராக மாற்ற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, ஆரணி உதவி கலெக்டர் தனலட்சுமி, பழங்குடியினர் நல மாவட்ட திட்ட அலுவலர் செந்தில்குமார், அரசினர் தொழிற் பயிற்சி முதல்வர் ஜெய்சங்கர், ஜவ்வாதுமலை ஒன்றிய குழுத்தலைவர் ஜீவாமூர்த்தி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.